பதவி உயர்வு விதிகளால் குழப்பம்: 1,040 ஹெச்.எம்.,களுக்கு சிக்கல் | Kalvimalar - News

பதவி உயர்வு விதிகளால் குழப்பம்: 1,040 ஹெச்.எம்.,களுக்கு சிக்கல்செப்டம்பர் 19,2023,10:52 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பள்ளிக்கல்வி பணியாளர் விதியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால், பதவி உயர்வு பெற்ற, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை, நீதிமன்ற உத்தரவுப்படி, மீண்டும் பழைய பதவிக்கு கொண்டு வர, பள்ளிக்கல்வி முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட ஆலோசனை துவங்கியுள்ளது.


தமிழக அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் என, இரண்டு வகை பதவி உயர்வு வாய்ப்புகள் உள்ளன. முதுநிலை பள்ளி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால், பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பழைய பணி மூப்பு ரத்து செய்யப்படும். அதற்கு பதில் மேல்நிலை கல்வி விதியில், புதிய பணி மூப்பு வழங்கப்படும். இவ்வாறு முதுநிலை ஆசிரியர்களாக செல்லும் ஆசிரியர்கள், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக, அடுத்த பதவி உயர்வை பெற, சில ஆண்டுகள் தாமதமாகும்.


பணி மூப்பு


இந்த தாமதத்தை சமாளிக்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சில ஆண்டு பணிக்கு பின், தங்களின் பழைய பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு அடிப்படையில், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்றனர்.


இந்த பதவி உயர்வு தான் பள்ளிக்கல்விக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பதவி உயர்வு பெற்று, மேல்நிலை பணி விதிக்கு மாறியவர்கள், மீண்டும் தங்களின் பழைய பணி மூப்புக்கு மாறுவது முரண்பாடானது.


அதனால், தங்களுக்கான பதவி உயர்வு வாய்ப்பு பறி போவதாக, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தமிழாசிரியர்கள் கழக சிறப்பு தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகி ராஜன் உள்ளிட்ட சிலர், வழக்கு தொடர்ந்தனர்.


நீதிமன்ற உத்தரவு


கடந்த, 2008ம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களில், 15 ஆண்டுகளாக நடந்த பல்வேறு வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றத்தில், மார்ச், 23ல் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 2016 ஜன.,1 மற்றும் அதற்கு பின், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற, முதுநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு செல்லாது; அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு, கடந்த மாதம், 18ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.


சட்ட சிக்கல்


எனவே, சென்னை உயர் நீதிமன்றம் மார்ச்சில் பிறப்பித்த உத்தரவை, தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட ஆலோசனையை பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, இயக்குனர் அறிவொளி மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.


அரசு தரப்பில் சட்ட ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், 1,040 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களாக பழைய நிலைக்கு பதவி இறக்கம் செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, முதுநிலை ஆசிரியராக நியமிக்கப்பட உள்ளனர்.


பள்ளிக்கல்வியின் இந்த முடிவை எதிர்த்து, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும், நேரடி நியமன முதுநிலை ஆசிரியர்களும் வழக்கு தொடர, ஆலோசித்து வருகின்றனர். இதனால், பள்ளிக் கல்வி துறைக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us