பீதர்: கர்நாடகாவில், மற்றொரு ராணுவ பள்ளி கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விஜயபுரா, குடகுக்கு பின், மாநிலத்தின் மூன்றாவது ராணுவ பள்ளி, பீதரில் கட்டப்படும், என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா தெரிவித்தார்.
பீதரில் நேற்று அவர் கூறியதாவது:
கல்யாண கர்நாடக உத்சவா நாளன்றே, ராணுவ பள்ளி கட்ட, மத்திய அரசின் அனுமதி கிடைத்தது. நாட்டின் 23 நகரங்களில் ராணுவ பள்ளி ஆரம்பமாகும். பீதருக்கும் ராணுவ பள்ளி கிடைத்துள்ளது.
பீதர் நகரின், நேஷனல் ஆங்கில பப்ளிக் பள்ளி வளாகத்தில், 8 ஏக்கர் பரப்பளவில், ராணுவ பள்ளி கட்டப்படும். மாணவர் விடுதி கட்டுவது உட்பட, மற்ற அடிப்படை வசதிகளை செய்ய, 24 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும். விரைவில் அடிக்கல் நாட்டி, பணிகளை முடித்து வரும் ஆண்டில் இருந்து, வகுப்புகள் துவக்கப்படும்.
விஜயபுரா, குடகுக்கு பின், பீதரில் கட்டுவது, கர்நாடகாவின் மூன்றாவது ராணுவ பள்ளியாகும். ராணுவ பள்ளி துவங்குவதால், இப்பகுதி மாணவர்கள், தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய கப்பல் படை அகாடமி போன்ற, பள்ளிகளில், நுழைவு பெற உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.