பெங்களூரு: சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கிய பாதையில், ஆதித்யா எல்1 பயணிப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
மேலும் 110 நாட்கள் பயணித்து, சூரியனின் எல்1 புள்ளியின் சுற்றுவட்டப்பாதையை, விண்கலம் அடையும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா-எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி-57 ராக்கெட் வாயிலாக, கடந்த 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து, 125 நாட்கள் பயணம் செய்து, 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, லாக்ராஞ்சியன் புள்ளி-யை இந்த விண்கலம் சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட உள்ளது.
பூமியை சுற்றியுள்ள அதிவெப்ப ஆற்றல், அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை, விண்கலம் அளவிடத் துவங்கியுள்ளது. இந்நிலையில், 16 நாட்கள் பூமியை சுற்றிய ஆதித்யா எல்1, பூமி சுற்றுவட்டத்தையில் இருந்து விலகி, சூரியனின் லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கிய பாதையில், பயணிப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வு நள்ளிரவு 2 மணிக்கு நடந்திருப்பதாகவும், இங்கிருந்து, 110 நாட்களில், ஏறத்தாழ 15 லட்சம் கி.மீ., பயணித்து, சூரியனின் எல்1 புள்ளியின் சுற்றுவட்டப்பாதையை விண்கலம் அடையும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.