சென்னை: உறுப்பு கல்லுாரிகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்வதில் தயக்கம் ஏன் என்பதற்கு, அண்ணா பல்கலை நிர்வாகம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த, 2010 -11ம் ஆண்டில், அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம், 20,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, தங்களை நிரந்தரம் செய்யக் கோரியும், புதிய அறிவிப்பை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன.
நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
பொறியியல் கல்லுாரி களை பொறுத்தவரை, அதுவும் அண்ணா பல்கலை போன்ற பல்கலை நடத்தும் கல்லுாரிகளில், நிரந்தர அடிப்படையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும். யு.ஜி.சி., அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளில், நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல், தொழில்நுட்ப வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை. அண்ணா பல்கலையின் உறுப்புக் கல்லுாரி என்பதற்காக, விதிகளை மீற முடியாது.
துவக்க கட்டத்தில் ஒரு கல்லுாரி இருந்தால், உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை வைத்துக் கொள்வதில் சிரமம் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும். குறைந்தது ஒன்று, இரண்டு ஆண்டுகள், தற்காலிக ஆசிரியர்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம். ஆனால், அதை நீண்ட காலத்துக்கு அனுமதிக்க முடியாது. எனவே, 12 முதல் 15 ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களை, பணிவரன்முறை செய்வதில் என்ன சிரமம் உள்ளது.
கூடுதல் ஆசிரியர்கள் தேவைக்காக, விளம்பரம் வெளியிட்டு, தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது பணியில் உள்ள தற்காலிக ஆசிரியர்களை வரன்முறை செய்வதில் என்ன தயக்கம்; காலியிடங்களில் நிரந்தர அடிப்படையில், நேரடி தேர்வு ஏன் நடத்தக் கூடாது என்பதற்கு, அண்ணா பல்கலை பதில் அளிக்க வேண்டும்.
மேலே எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களை, நிலை அறிக்கையாக, வரும், 26க்குள் அண்ணா பல்கலை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும் 26க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.