சென்னை: சென்னையில், மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது.
அரசு மற்றும் தனியார் கண் மருத்துவ மனைகளில் தினசரி 100க்கும் மேற்பட்டோர், கண் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும், மெட்ராஸ் ஐ பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில், சென்னையில் 12 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு, கண் பரிசோதனை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.அந்த வகையில், சென்னை தி.நகரில் உள்ள செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளியில் நடந்த, மெட்ராஸ் ஐ பரிசோதனையை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மெட்ராஸ் ஐ பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், வரும் 25ம் தேதி வரை, 12 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு, கண் பரிசோதனை செய்யப்பட உள்ளது.இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு கண் வலி, கண் சிவந்து போகுதல், கண்களில் நீர்வழிதல், எரிச்சல் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.இந்நோய் குணமடைய ஒரு வாரம் வரை ஆகும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.