இந்திய கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் ஆக பணிபுரியவும், உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளவும் எழுத வேண்டிய தேசிய தகுதித் தேர்வு தான் நெட்.
பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை இத்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துகிறது. என்.எப்.எஸ்.சி., என்.எப்.ஒ.பி.சி., எம்.ஏ.என்.எப்., ஆகிய தேசிய அளவிலான உதவித்தொகை பெறவும் &'நெட்’ ஒரு தகுதித் தேர்வாக உள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கும் இத்தேர்வு அவசியமாகிறது. மொத்தம் 83 பாடப்பிரிவுகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தகுதிகள்:
துறை சார்ந்த பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் உரிய முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். &'ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்’- ஜே.ஆர்.எப்., எனும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30. எனினும் விதிமுறைப்படி, சிறப்பு பிரிவினர்களுக்கு வயது வரம்பு மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண்களில் தளர்வு உண்டு. உதவி பேராசிரியர் தகுதிபெற விண்ணப்பிப்பவர்களுக்கு வயதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை.
தேர்வு முறை:
கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும் இத்தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வில் முதல் தாளில் 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 100 கேள்விகளும் இடம்பெறும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு ‘நெகட்டிவ்’ மதிப்பெண் கிடையாது.
முதல் தாளில் ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி முறைகள் குறித்த மாணவரது அறித்திறனை பரிசோதிக்கும் வகையிலும், இரண்டாம் தாளில் அவரவர் பாடப்பிரிவு சார்ந்த கேள்விகளும் ‘அப்ஜெக்டிவ்’ வடிவில் இடம்பெறும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://ugcnet.nta.nic.in/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நேரம்: 3 மணிநேரம்.
விபரங்களுக்கு: www.nta.ac.in