புனேயிலுள்ள திரைப்படக் கல்லூரியில் படித்து திரைத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இந்த திரைப்படக் கல்லூரிப் படிப்புகளைப் பற்றியும் சேர்க்கை முறை பற்றியும் கூறவும். | Kalvimalar - News

புனேயிலுள்ள திரைப்படக் கல்லூரியில் படித்து திரைத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இந்த திரைப்படக் கல்லூரிப் படிப்புகளைப் பற்றியும் சேர்க்கை முறை பற்றியும் கூறவும்.ஜனவரி 31,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் பல இடங்களில் திரைப்படக் கல்லூரிகள் நடத்தப்படுவதை அறிவீர்கள். புனேயிலுள்ள திரைப்படக் கல்லூரி அதன் தரத்திற்காக அறியப்படுவது. திரைப்படம் மற்றும் டிவி துறை தொடர்பான படிப்புகள் இங்கே நடத்தப்படுகின்றன. பொதுவாக இந்த நிறுவனத்தின் படிப்புகளுக்கான விளம்பரங்கள் மீடியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது.

இந்த விளம்பரம் வெளியான பின்பு நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளுக்காக நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது.

திரைப்படத் துறை படிப்புகள்
டைரக்சன், சினிமாட்டோகிராபி, ஆடியோகிராபி, எடிட்டிங், ஆக்டிங், ஆர்ட் டைரக்சன் மற்றும் புரடக்சன் டிசைன், அனிமேஷன் அண்ட் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பீச்சர் பிலிம் ஸ்கிரீன்பிளே ரைட்டிங் ஆகிய பிரிவுகளில் இந்த நிறுவனம் படிப்புகளை நடத்துகிறது. டைரக்சன் மற்றும் சினிமாட்டோகிராபி, ஆடியோகிராபி, எடிட்டிங் ஆகியவை 3 ஆண்டு பி.ஜி., டிப்ளமோ படிப்புகளாகும். பட்டப்படிப்பு தகுதி. தலா 12 சீட்களே உள்ளன.

ஆக்டிங் படிப்பானது 2 ஆண்டு பி.ஜி., டிப்ளமோ படிப்பாகும். பட்டப்படிப்பு தகுதி. ஆர்ட் டைரக்சன் மற்றும் புரடக்சன் டிசைன் படிப்பும் 2 ஆண்டு பி.ஜி., டிப்ளமோ படிப்பு தான். ஆர்க்கிடெக்சர், அப்ளைட் ஆர்ட் போன்றவற்றில் பட்டப்படிப்பு படித்திருப்பவர் மட்டுமே இதில் சேர முடியும்.

அனிமேஷன் அண்ட் கிராபிக்ஸ் படிப்பானது ஒன்றரை ஆண்டு சான்றிதழ் படிப்பாகும். இந்தப் படிப்பில் சேர பைன் ஆர்ட்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவருக்கு முன்னுரிமை தரப்படுகிறது. அடிப்படையில் பிளஸ் 2 தான் இதற்கான தகுதியாகும். பீச்சர் பிலிம் ஸ்கிரீன் பிளே ரைட்டிங் படிப்பானது ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பாகும். தகுதி பட்டப்படிப்பு.

‘டிவி’ படிப்புகள்
டைரக்சன், எலக்ட்ரானிக்ஸ் சினிமாட்டோகிராபி, வீடியோ எடிட்டிங், ஆடியோகிராபி மற்றும் டிவி இன்ஜினியரிங் ஆகியவை இத்துறையில் தரப்படும் படிப்புகள். டைரக்ஷனும் எலக்ட்ரானிக்ஸ் சினிமாட்டோகிராபி படிப்பும் ஒரு ஆண்டு பி.ஜி., சான்றிதழ் படிப்புகளாகும். பட்டப்படிப்பு தகுதி. வீடியோ எடிட்டிங்கில் ஒரு ஆண்டு பி.ஜி., படிப்பும் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பும் நடத்தப்படுகின்றன. இதற்கும் பட்டப்படிப்பே தகுதி.

ஆடியோகிராபி மற்றும் ‘டிவி’ இன்ஜினியரிங்கில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்பு தகுதி. மேலும் பிளஸ் 2ல் இயற்பியலை படித்திருப்பது அவசியம். இந்தப் படிப்புகள் அனைத்துக்குமே தலா 8 சீட்கள் உள்ளன. 3 ஆண்டு பி.ஜி. டிப்ளமோ படிப்புகளுக்கு ஆண்டுக்கு கல்விக் கட்டணம் மட்டும் சுமார் 30 ஆயிரம் ரூபாய் பெறப்படுகிறது.

ஆக்டிங் கட்டணம் ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம். ஆர்ட் டைரக்ஷனுக்கு ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய். அனிமேஷன் படிப்புக்கு ரூ.1.20 லட்சம் ஆண்டுக் கட்டணமாகப் பெறப்படுகிறது. ‘டிவி’ படிப்புகளுக்குத் தோராயமாக ரூ.50 ஆயிரம் ஆண்டு தோறும் பெறப்படுகிறது.

வெறும் திரைப்படக் கவர்ச்சியால் உந்தப்பட்டு இந்தப் படிப்புகளில் சேராமல் யோசித்து எடுக்கப்படும் லட்சிய முடிவால் சேர்ந்து பின்பு இயல்பான கிரியேடிவ் திறன்களைக் கொண்டு இந்தப் படிப்புகளை முடித்தால் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us