சென்னை: அண்ணா பல்கலையின் 11 உறுப்பு கல்லுாரிகளில், 27 பாடப்பிரிவுகளை நிறுத்துவதற்கான சுற்றறிக்கை தகவல், நேற்று காலையில் வெளியானது. கடும் எதிர்ப்பு கிளம்பியதும், நேற்று மாலையே, அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இப்பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும், 11 உறுப்பு கல்லுாரிகளில், 27 பாடப்பிரிவுகளை நிறுத்துமாறும், வரும் கல்வி ஆண்டுக்கு மாணவர்களை சேர்க்கக் கூடாது என்றும், சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
இதில், 19 பாடப்பிரிவுகள் தமிழ் வழியிலும், எட்டு பிரிவுகள் ஆங்கில வழியிலும் நடத்தப்பட்டு வருவதாகவும், அவை மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 20ம் தேதியிட்ட அந்த சுற்றறிக்கை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல், நேற்று காலை தான் வெளியானது; அதற்கு, பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. உடனடியாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பல்கலை முடிவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து, உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வி துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, இந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்படுவதாக, நேற்று மாலையில், பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்தார்.
இதுகுறித்து, துணை வேந்தர் வேல்ராஜ் அளித்த பேட்டி:
பல்கலை இணைப்பில் உள்ள, 11 உறுப்பு கல்லுாரிகளிலும், மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. சில இடங்களில், 10 மாணவர்கள் தான் உள்ளனர். எனவே, மாணவர்கள் ஆர்வம் காட்டாத கல்லுாரிகளில் மட்டும், இந்த பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்காமல், அவற்றை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
பின், அரசின் உத்தரவுப்படி, இந்த முடிவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. எப்போதும்போல் இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்த முடிவாகியுள்ளது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழியில் பாடம் கற்பிக்க முக்கியத்துவம் தருமாறு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில், இன்ஜினியரிங் பாடப் புத்தகங்களை தமிழுக்கு மொழி மாற்றும் பணி நடக்கிறது. வரும் ஆண்டுகளில் அந்த புத்தகங்களை பயன்படுத்தி, தமிழ் வழி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.