சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்பில், 1.07 லட்சம் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, 2.46 லட்சம் பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். இவர்களில் மாணவர்கள், 1.17 லட்சம்; மாணவியர், 1.29 லட்சம்; மூன்றாம் பாலினத்தவர், 79 பேர்.
இதில், 2.44 லட்சம் பேர் தமிழக அரசு பாடத் திட்ட பள்ளிகளிலும், 2,060 பேர் சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், 53 பேர் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும், பிளஸ் 2 படித்துள்ளனர். பிற மாநில பாடத்திட்டத்தில், 168 பேர் படித்து, விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களது, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், கல்லுாரி வாரியாக தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல், அனைத்து கல்லுாரிகளிலும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த மாணவர்களின் மொபைல்போன் மற்றும் இ - மெயில் முகவரிக்கும், தரவரிசை விபரம் அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும், 29ம் தேதி சிறப்பு ஒதுக்கீடு கவுன்சிலிங்கும், 1ம் தேதி பொது கவுன்சிலிங்கும் துவங்க உள்ளது. புதிய மாணவர்களுக்கு ஜூன் 22ல் வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.