ஜப்பானிய அரசின் கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அமைச்சகம் - எம்.இ.எக்ஸ்.டி., சார்பில் ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை திட்டத்தில், தகுதி உடைய இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்புகள்:
கணிதம், இயற்பியல், வேதியியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், நேவல் ஆர்க்கிடெக்சர், சிவில், என்விரான்மென்டல் இன்ஜினியரிங், கெமிக்கல் படிப்புகள், வேளாண் படிப்புகள், பார்மசி, நர்சிங், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், அரசியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, ஜப்பானிய மொழி, பொருளாதாரம், தொழில்நிர்வாகம் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகள்.
தகுதிகள்:
பாடப்பிரிவுக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடும். ஏப்ரல் 2, 1999ம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். மாணவர்கள் ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவராக இருத்தல் வேண்டும். ஜப்பானுக்கு வருவதற்கு முன்பாகவும், வருகை புரிந்த உடனும் ஜப்பான் நாடு குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம்.
மேலும், அந்நாட்டு அரசின் கல்வித்திட்டத்திற்கு ஏற்ப ஜப்பானிய மொழியில் கற்கும் ஆர்வமும், திறனும் கொண்டிருக்க வேண்டும். உடல் தகுதியும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆகவே, தகுதியான மருத்துவரிடம் இருந்து உடல் மற்றும் மனநிலை தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை விபரம்:
தேர்வு செய்யப்படும் மாணவர்களது போக்குவரத்து செலவு, நுழைவுத்தேர்வு கட்டணம், பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தை ஜப்பானிய அரசே ஏற்கிறது. இவைதவிர, மாதம் சுமார் 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 2024 ஏப்ரல் முதல் மார்ச் 2029ம் ஆண்டுகள் வரையிலான 5 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இதில், ஓர் ஆண்டு ஜப்பானிய மொழியை கற்பதற்கான தயார்படுத்துதல் காலமும் அடங்கும். மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் 6 ஆண்டுகள் கொண்ட பார்மசி படிப்பு ஆகியவற்றிற்கு மார்ச் 2031 வரையிலான 7 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 29
விபரங்களுக்கு: www.education.gov.in