சென்னை: பல்துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது, கண்டுபிடிப்புகளை உலக அளவில் கொண்டு செல்வதின் ஒரு பகுதியாக, 15 ஆராய்ச்சி குழுக்களை கொண்ட, ஐ.ஓ.இ., எனும் இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் திட்டத்தின் அறிமுக விழா, நேற்று நடந்தது.
இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் என்பது பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் கீழ் உள்ள அங்கீகாரத் திட்டம். இது, உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த உதவுகிறது.
சென்னை ஐ.ஐ.டி.,யில் நேற்று நடந்த இந்த ஐ.ஓ.இ., திட்ட அறிமுக விழாவில், பலகட்டங்களுக்குப் பின் தேர்வான, 15 குழுக்களின் ஆராய்ச்சி வீடியோ வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, ஒவ்வொரு குழுக்களுக்கும், ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பாராட்டு சான்று வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது:
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், 2018- 19 கல்வியாண்டில், ஐ.ஐ.டி.,க்கு, இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ் என்ற அங்கீகாரம் கிடைத்தது. இதில், ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த நிதியை வைத்து, சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக, ஆராய்ச்சி குழுக்களை தேர்வு செய்ய, 100க்கும் மேற்பட்ட குழுக்களில் இருந்து பரிந்துரை வந்தது.
இதில், அடுத்த 25 ஆண்டுகளின் தேவை அடிப்படையில், புதிய யுக்திகளை புகுத்தி ஆராய்ச்சி செய்த குழுக்களை தேர்வு செய்தோம். மொத்தம் பங்கேற்ற 68 ஆராய்ச்சி குழுக்களில், பலகட்ட தேர்வுக்கு பின், 15 ஆராய்ச்சி குழுக்கள் இறுதி செய்யப்பட்டன.
இதில், 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளனர்.
இவர்கள், உலகமே வியக்கும் அளவுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயத்தில் எளிதாக பயன்படுத்தும் இயந்திரங்கள் தயாரிப்பு, தொழில்நுட்பத்தில் புது பரிணாமங்களை அடைய, ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.
இவை, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் ஆராய்ச்சிகளாக இருக்கும். பறக்கும் வாகனம் குறித்து தீவிரமாக ஆராய, ஏழு உரிமம் கிடைக்க வேண்டி உள்ளது.
இரண்டு ஆண்டுகளில், உரிமம் கிடைத்துவிடும். மூன்று ஆண்டுகளில், வணிக ரீதியான பறக்கும் வாகனம் பயன்பாட்டுக்கு வந்து விடும். இவ்வாறு ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஐ.ஐ.டி., இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, பேராசிரியர் ரகுநாதன் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.