ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மிஷின் லேர்னிங் போன்ற நவீன தொழில்நுட்ப படிப்புகளையே இன்று பெரும்பான்மையான மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். கோர் இன்ஜினியரிங் பிரிவிலும் ஏராளமான வாய்ப்புகள் இன்று உருவாகி வருகின்றன என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த துறையாக இருந்தாலும், ஆழ்ந்த கற்றலும், பல்துறை திறனும் இன்றைய காலக்கட்டத்திற்கு அவசியமாகிறது. பயோமெடிக்கல், பயோடெக்னலாஜி, அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்து, அவற்றில் முழுமையான திறனை வளர்த்துக் கொள்ளும்பட்சத்திலும் சிறந்த வேலை வாய்ப்பை பெறலாம்.
சுய கற்றல் அவசியம்
விருப்பப் பாடமாக எந்த ஒரு நவீன தொழில்நுட்ப பாடங்களையும் தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு இன்று உள்ளது. ஆகவே, முதன்மை பாடமாக மட்டுமே எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் தேர்வு செய்ய வேண்டியது இல்லை. எந்த படிப்பை எடுத்தாலும், ஆழ்ந்த கற்றல் மிக அவசியம். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் மனப்பக்குவமும் இன்றைய தேவை.
கொரோனா காலத்திற்கு பிறகு, மாணவர்களிடம் தொடர்பியல் திறன், எழுத்துத் திறன் வெகுவாக குறைந்து விட்டது. சுயகற்றலலும் இன்று வெகுவாக குறைந்து விட்டது. எந்த ஒரு பாடம் குறித்தும் முழுமையான அறிவை மேம்படுத்தும் வகையில், சுயமாக கற்கும் ஆர்வத்தை மாணவர்கள் பெற வேண்டும். தொழில் மற்றும் சமூகம் சார்ந்த சிக்கல்கள், சவால்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதை &'புராஜெக்ட்’ ஆக மாணவர்கள் மேற்கொள்ளும்பட்சத்தில் அவர்களது திறனும், புத்தாக்க சிந்தனையும் விரிவடைகிறது.
கல்லூரியை தேர்வு செய்தல்
கல்லூரியை தேர்வு செய்வதில் பெரும்பான்மையான மாணவர்களும், பெற்றோரும் &'அதிக நன்கொடை வாங்கும் கல்வி நிறுவனங்கள் தான் சிறந்தவை’ என்ற தவறான புரிதலை கொண்டுள்ளனர். நன்கொடை வாங்காமல், சிறந்த பயிற்சி அளிக்கும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.
கல்வி நிறுவனங்கள், எந்த ஒரு புதிய படிப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவும், பேராசிரியர்களுக்கு முதலில் சரியாக பயிற்சி அளிக்க வேண்டும். எந்த ஒரு பாடத்திலும் ஆசிரியர்கள் முழு தகுதி பெற்றிருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க முடியும்.
கல்வி நிறுவனங்களில் &'புராடக்ட் டெவெலப்மெண்ட் செல்’ திறம்பட செயல்படும்பட்சத்தில் இன்ஜினியரிங் கல்வி முழுமை அடையும். அதிக தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் வாயிலாக பாடத்திட்டத்தையும், பயிற்சி முறையையும் திறம்பட செயல்படுத்த முடியும். தொழில் துறையின் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டத்தை வடிவமைப்பதன் வாயிலாக மாணவர்களுக்கு வாய்ப்புகளை பிரகாசமாக்க முடியும்.
-இந்து முருகேசன், துணை தலைவர், கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை.