சென்னை: கல்வித் துறையில் ஊழல் செய்தவர்கள் மீது, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், 50 ஆயிரம் மாணவர்களுக்கு மேல், பிளஸ் 2 தேர்வு எழுதாதது அதிர்ச்சி அளிக்கிறது. அதில் 46 ஆயிரம் பேர், அரசு பள்ளி மாணவர்கள். இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. 46 ஆயிரம் மாணவர்களும், இடைநின்றவர்கள் எனக் கூறப்படுகிறது. படிக்காத மாணவர்கள் படிப்பதாக கணக்கு காண்பிக்கும் மர்மம் என்ன?
இது உண்மை என்றால், இரண்டு ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருகின்றனர் என, தி.மு.க., அறிக்கை விட்டது, உண்மைக்கு புறம்பானது என்பது புலனாகிறது.
தவறான செய்தியை விளம்பரப்படுத்திக் கொண்டது ஏன் என்பதை, தமிழக கல்வித் துறை விளக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில், இலவச சீருடை, சைக்கிள், பாடப் புத்தகங்கள் என, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இல்லாத மாணவர்கள் இருப்பதாக, கணக்கு காண்பித்திருந்தால், பெரும் ஊழல் நடந்திருப்பதாக, உறுதியாக சொல்ல முடியும்.
பிளஸ் 1 வகுப்புக்கு, 322 கோடி ரூபாய்; பிளஸ் 2 வகுப்புக்கு 322 கோடி ரூபாய் என, ஒவ்வொரு ஆண்டும் 644 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதை மறுக்க முடியுமா?
இந்த விவகாரத்தில், ஊழல், முறைகேடு நடந்திருந்தால், அதற்கு தி.மு.க., அரசே பொறுப்பேற்க வேண்டும். நடந்த குற்றத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவிப்பதோடு, கல்வி அமைச்சர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.