திருச்சி: திருச்சியில் பள்ளி ஆசிரியையிடம் 7000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தொடக்கக் கல்வி அலுவலர் உதவி கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கைலாசபுரத்தில் &'பெல்&' தமிழ் பயிற்று மொழி நடுநிலைப் பள்ளியில் உதவி இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தவர் ஞானசெல்வி. குண்டூரை சேர்ந்த அவரது பணி நியமனத்தை அங்கீகாரம் செய்வதற்கு 7000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் செய்யப்பட்டது.
அதன்படி வழக்குப்பதிவு செய்த திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் 2002ம் ஆண்டு ஆக. 5ம் தேதி அப்போது மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக இருந்த வள்ளியப்பன் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் கவுரி கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் உதவி கண்காணிப்பாளர் வரதராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்சம் வாங்கிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போதே நேர்முக உதவியாளர் கவுரி கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இறந்து விட்டனர். நேற்று மற்ற இருவர் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வள்ளியப்பன் உதவி கண்காணிப்பாளர் வரதராஜன் ஆகியோருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
மேலும் அரசு பணியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக இருவருக்கும் தலா மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.