சென்னை: பிளஸ் 2 பொது தேர்வில், தமிழை தொடர்ந்து ஆங்கிலத்திலும், 50 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
பிளஸ் 2 ஆங்கில மொழித்தாள் தேர்வு நேற்று நடந்தது. வினாக்கள் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு மாணவர் முறைகேடு புகாரில் பிடிபட்டார்.
தமிழ் மொழித்தாள் போன்று, இந்த தேர்விலும், 50 ஆயிரம் பேர் வரை ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அவர்களில், 44 ஆயிரம் பேர் இடைநிற்றல் மாணவர்கள்; 6,000 பேர் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
பிளஸ் 1 தேர்வு ரத்தாகுமா?
இடைநிற்றல் மற்றும் ஆப்சென்ட் மாணவர்களின் விவகாரம் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தரப்பில், பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன், முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இடைநிற்றல் மாணவர் பிரச்னைக்கு, பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு நடத்தும் முறையே காரணம் என்பதும், இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.