கடந்த சில ஆண்டுகளாகத் தான் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்., படிப்பு பற்றிய பரவலான விழிப்புணர்வு நம் மாணவர்களிடையே காணப்படுகிறது. இந்தியாவில் மிகக் கடுமையான போட்டியை உள்ளடக்கியது இதற்கான நுழைவுத் தேர்வு.
இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை பிளஸ் 2ல் படித்திருப்பவர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். ஏற்கனவே பிளஸ் 2 முடித்திருப்பவரும் இந்த ஆண்டு முடிக்கவிருப்பவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். தனித்தனியாக ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50 சதவீதம் பெற்றிருப்பதும் மொத்தமாக 3 பாடங்களிலும் சேர்த்து 60 சதவீதத்துக்குக் குறையாமலும் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலத்திலும் 50 சதவீதத்துக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் ஒன்றை முக்கிய பாடமாகக் கொண்டு பி.எஸ்சி., தகுதியைப் பெற்றிருப்பவரும் பெறவிருப்பவரும் கூட இதற்கு விண்ணப்பிக்கலாம். 17 வயது முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.எஸ்சி., தகுதியுடையவர் 24 வயது வரை இருக்கலாம். 2 மணி நேர போட்டித் தேர்வு இது. 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும்.
உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியலில் தலா 50 கேள்விகள் இடம் பெறும். இன்டெலிஜென்ஸ் மற்றும் லாஜிகல் ரீசனிங்கில் 25 கேள்விகளும் ஆங்கிலத்தில் 25 கேள்விகளும் இடம் பெறும். இந்தத் தேர்வு வரும் மே 3 அன்று நடத்தப்படவுள்ளது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 28, 2009.
இதை முடித்தபின் கட்டாயம் ராணுவத்தில் 5 ஆண்டுகள் மருத்துவராகப் பணி புரிவது அவசியம்.