புதுடில்லி: நாடு முழுதும், 9.30 லட்சம் குழந்தைகள், துவக்கப் பள்ளி படிப்பில் இருந்து வெளியேறியுள்ளனர் என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
கேள்வி ஒன்றுக்கு, மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி, எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள, பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுவோர் குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கணக்கெடுப்புகள் நடத்துகின்றன. இதன்படி, நாடு முழுதும், 9.30 லட்சம் குழந்தைகள், துவக்கப் பள்ளி நிலையில், படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். இதில், 5.03 லட்சம் சிறுவர்கள், 4.27 லட்சம் சிறுமியர் அடங்குவர்.
அதிக அளவாக, உத்தர பிரதேசத்தில், 3.96 லட்சம் பேர் பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளனர். அதற்கடுத்து, பீஹாரில், 1.34 லட்சம், குஜராத்தில், 1.06 லட்சம் குழந்தைகள் படிப்பை கைவிட்டுள்ளனர். இதுபோன்ற குழந்தைகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை பள்ளிகளில் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.