சென்னை: சென்னையில் நடந்த மூன்று நாள் ஜி - 20 கல்வி பணிக் குழு கூட்டத்தால், கல்வி, வேலைவாய்ப்பில் புதிய வாய்ப்புகள் உருவாகும், என, மத்திய உயர் கல்வி துறை செயலர் சஞ்சய்மூர்த்தி, மத்திய பள்ளிக் கல்வி துறை செயலர் சஞ்சய்குமார் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
சென்னையில் நேற்று அவர்கள் அளித்த பேட்டி:
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட, 20 நாடுகளின் கூட்டமைப்பான &'ஜி - 20&' உச்சி மாநாடு, இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, ஜி - 20 கல்வி பணிக் குழுவின் முதல் கூட்டம், சென்னையில் மூன்று நாட்கள் நடந்து முடிந்துள்ளது.
இதில், 30 நாடுகளைச் சேர்ந்த, 80 பிரதிநிதிகள் பங்கேற்றனர். &'யுனிசெப்&' உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் பங்கேற்றன. தமிழக மக்கள் அளித்த வரவேற்பு, உபசரிப்பில் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள வசதிகளும், வாய்ப்புகளும் அவர்களை வியப்பில் ஆழ்த்தின.
அடிப்படை எண்ணறிவு எழுத்தறிவு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், தொழில் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் ஆகிய, நான்கு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற, இந்தியாவின் கருத்தை, அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன. இவற்றை சாத்தியமாக்குவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் இடையே கல்விசார் ஒத்துழைப்பு, ஆராய்ச்சியை மேம்படுத்துவது, கல்வியில் மின்னணு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, அஸ்திவாரமான பள்ளிக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து, பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை, கொள்கைகளை முன்வைத்தனர்.
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து, விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. கல்வித் துறையில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு நல்ல அம்சங்களும் உள்ளன. அவை இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.
திறன் வாய்ந்த பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்குவது, மற்ற நாடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்புவது, திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஒவ்வொரு நாடுகளிலும் வெற்றிகரமாக பின்பற்றப்படும் கல்வி நடைமுறைகள், திட்டங்களை எடுத்துக் கூறினர். இந்த கருத்து பரிமாற்றங்கள் அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருந்தன.
அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதில் உள்ள சவால்களுக்கு தீர்வு காண்பது, ஆராய்ச்சியை ஊக்கப்படுத்துவது, கற்பித்தல்,- கற்றல் செயல்முறையை மேம்படுத்துதல், கற்றல் குறைபாடுகளை களைதல், இதற்காக மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதிய வாய்ப்புகள் உருவாகும். இதை தொடர்ந்து, அமிர்தசரஸ், புவனேஸ்வர், புனே ஆகிய நகரங்களில் கல்வி பணிக் குழு கூட்டங்களும், நிறைவாக புனேவில் கல்வி அமைச்சர்கள் மாநாடும் நடக்கவுள்ளது.
சென்னை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்த கூட்டங்களில் முன்வைக்கப்படும். அடுத்த ஆண்டுக்கான ஜி - 20 மாநாடு பிரேசிலில் நடக்கவுள்ளது. அந்நாட்டு பிரதிநிதிகளும் சென்னை கூட்டத்தில் பங்கேற்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.