அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், மாணவர்களின் வாசிப்பு மற்றும் கணிதத்திறன் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் ஏ.எஸ்.இ.ஆர்., எனும் ஆண்டு கல்வி நிலை அறிக்கை - 2022ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய்கள் காரணமாக, நீண்டகாலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதிலும், மாணவர் சேர்க்கை 98 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், மாணவர்களின் வாசிப்பு மற்றும் கணிதத்திறன் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் ஏ.எஸ்.இ.ஆர்., எனும் ஆண்டு கல்வி நிலை அறிக்கை - 2022ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய அளவிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
* பள்ளிகளில் சேர்க்கப்படாத 6-14 வயதுடைய குழந்தைகளின் விகிதம் 2018ல் இருந்ததை விட 2022ல் பாதியாகக் குறைந்துள்ளது. கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த பத்தாண்டுகளில் இது மிகக் குறைவு. இந்த வயதிற்குட்பட்டவர்களுக்கான சேர்க்கை விகிதம் கடந்த 15 ஆண்டுகளாக 95 சதவீதத்திற்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
* குறிப்பாக, 2018ல் 97.2 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம், தொற்றுநோய்களின் போது பள்ளிகள் மூடப்பட்ட போதிலும் 2022ல் 98.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்படி, பொருளாதார அழுத்தம் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேற வழிவகுக்கும் என்று கருதப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக 6-14 வயதுக்குட்பட்ட பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளின் விகிதம் 2.8லிருந்து 1.6 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.
* கிராமப்புற இந்தியா முழுவதும், 2022ம் ஆண்டில் 3 - 5 வயது குழந்தைகளின் சேர்க்கை விகிதம் 78.3 சதவீதமாக உள்ளது. இது 2018ம் ஆண்டை விட 7.1 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. பிற ப்ரி-ஸ்கூல் முறையில் இருந்து குழந்தை பருவக் கல்வியான அங்கன்வாடி முறையிக்கு கணிசமானோர் மாறியுள்ளனர். 2018ம் ஆண்டில் 57.1 சதவீதமாக இருந்த 3 வயது குழந்தைகளின் அங்கன்வாடி மையங்களிலான சேர்க்கை 2022ல் 66.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே ஆண்டுகளில் 4 வயதுடையவர்களின் சேர்க்கை 50.5 சதவீதத்திலிருந்து 61.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
* அரசு பள்ளிகளில், 2006 முதல் 2014 வரை 6-14 வயதுடைய மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வந்தது. 2014ல் 64.9 ஆக அதிகரித்த போதிலும், 4 ஆண்டுகள் வரையில் அந்த விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால், 2018ல் இது 65.6 சதவீதமாக உயர்ந்து, 2022ல் 72.9 சதவீதத்தை எட்டியது. இத்தகைய அரசு பள்ளிகளிலான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, நாடு முழுவதிலும் அனைத்து மாநிலங்களிலுமே காணப்படுகிறது. எனினும், 2018ல் 26.4 சதவீதமாக இருந்த தனியார் டியூசன் செல்லும் 1 - 8ம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை, 2022ல் 30.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
* மறுபுறம், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் வாசிப்பு திறன் கணிசமாக குறைந்ததுள்ளது. 3ம் வகுப்பு குழந்தைகளின் வாசிப்பு திறன் கேரளா, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும் அதிமான புள்ளிகள் குறைந்துள்ளன. மேலும், 5ம் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பு திறனும், அனைத்து வகுப்பு மாணவர்களின் கணித்திறனும் வெகுவாக குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.