மாநில கல்வி கொள்கை குறித்து கல்லுாரிகளில் கருத்து கேட்புஜனவரி 28,2023,11:23 IST
எழுத்தின் அளவு :
சென்னை: மாநில கல்வி கொள்கை குறித்து, கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்டு, வரும், 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, கல்லுாரி முதல்வர்களுக்கு, உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளின் முதல்வர்களுக்கு, மாநில உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலர் கிருஷ்ணசாமி அனுப்பியுள்ள கடிதம்:
தமிழகத்தில், மாநில அளவில் தனி கல்வி கொள்கை அமைக்க, தமிழக அரசால் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு, கல்லுாரி மற்றும் பல்கலைகளின் கல்வித்தரத்தின் மேம்பாடு குறித்து, கருத்துகள் தெரிவிக்க, தமிழக மாநில உயர்கல்வி மன்றத்துக்கு கடிதம் வந்துள்ளது.
தங்கள் கல்லுாரி ஆசிரியர்களிடமும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களிடமும், மாநில கல்வி கொள்கை குறித்து கருத்துகளை பெற வேண்டும். அதை அறிக்கையாக தொகுத்து, வரும், 31ம் தேதிக்குள், தமிழக மாநில உயர்கல்வி மன்றத்துக்கு,
tanshe_edu@yahoo.co.in என்ற &'இ- - மெயில்&' வழியே அனுப்ப வேண்டும்.
உயர்கல்வியின் தரம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர், மாணவர் கல்வி திறன், பாடத் திட்டம், வினாத்தாள், தேர்வுத்துறை சீர்திருத்தம் ஆகியவை குறித்து, கருத்துகள் பெறலாம்.
பல்துறை திறன் மேம்பாடு, ஆய்வரங்கம், கருத்தரங்கம் நடத்துதல், தேசிய தரவரிசை பட்டியலில் தமிழக கல்லுாரிகள் முன்னிலை இடம் பிடித்தல், போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல், கல்வி உதவி தொகை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், நல்ல ஆலோசனைகளை வழங்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.