சென்னை: கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்ப கருவியை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கிஉள்ளது.
உலகின் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிக்கும் வகையிலும், பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும், சர்வதேச அளவில், பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதன்படி, கடல் அலையின் வீச்சில், &'டர்பைன்&' என்ற சுழலியை சுழற்றி, மின்சாரம் தயாரிக்கும் முறையும் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த முறையில், பல்வேறு தனியார் நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும், பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை கண்டுபிடித்து வரும் நிலையில், சென்னை ஐ.ஐ.டி.,யும் புதிய கருவியை உருவாக்கி உள்ளது.
தமிழகத்தில், துாத்துக்குடி கடற்கரையில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் கடற்பகுதிக்குள், 20 மீட்டர் ஆழத்தில் இந்த கருவி நிறுவப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.
இந்த கருவி, வேகமான கடல் அலையை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த கருவியின் வழியே அடுத்த மூன்று ஆண்டுகளில், 1 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என, ஐ.ஐ.டி., முயற்சி மேற்கொண்டு உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., யின் கடலியல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் அப்துல் சமது தலைமையிலான அணியினர், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி மேற்கொண்டு, இந்த கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.
பல்வேறு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.