காற்று மாசுபாடு ஒரு ’அமைதியான கொலையாளி’ என்றும், பல்வேறு நோய்களுக்கும் அதிக உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்று சமீபத்தில் சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த காற்று தர மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற ஏராளமான நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.
காற்று மாசுபாடு பெரும்பாலான நகரங்களில் ஒரு பெரும் சவாலாக உள்ளது. பெரும் நகரங்கள் அதிக அளவிலான காற்று மாசுபாட்டிற்கு ஆளாகின்றன என்ற போதிலும், ஒரு நகரின் அனைத்து பகுதிகளிலும் அதிக காற்று மாசுபாடு இருக்காது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்கள், கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் என குறிப்பிட்ட இடங்களில் அதிக காற்று மாசுபாடு இருக்கும்.
காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன; கோடிக்கணக்கில் நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், அவை நிர்பந்தத்தின் அடிப்படையில் இல்லாமல் முறையாக செலவிடப்பட வேண்டும் என்றும், அரசாங்கங்கள், தனியார் நிறுவனங்கள், மக்கள் என அனைவரும் இணைந்து காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.