சென்னை: மாநில மொழிகளில் சட்டப் படிப்புகளைத் துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
சென்னை, பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலையில், 12வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. விழாவில், 5,176 பேர் பட்டங்கள் பெற்றனர்; 41 பேர் தங்கப் பதக்கம் பெற்றனர்.
பட்டங்களை வழங்கி, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
சட்டப் படிப்புகளை, அந்தந்த மாநில தாய்மொழியில் படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களில் மாநில மொழிகளை, வழக்காடு மொழியாக்க வேண்டும். சாமானியனுக்கும், நீதித் துறைக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். அவர்களும் வழக்காடு மொழியை புரிந்து கொள்ள வேண்டும்.
நீதி வழங்குவதில் காலதாமதம், விரைவான நீதி என்ற கொள்கையை குலைத்து விடும். தமிழகத்தில், உயர் நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றங்கள் வரையில், &'ஸ்மார்ட்&' அறைகள், &'வீடியோ கான்பரன்ஸ்&' வசதி உள்ளிட்ட, அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக, நீதிபதிகளுடன் ஆலோசிக்கப்படும். நாட்டில் பல கோடி வழக்குகள் தேங்கி உள்ளன. அவற்றை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கவர்னரும், சட்டப் பல்கலை வேந்தருமான ரவி பேசியதாவது:
விரைவான நீதி வழங்கல் முறையை உறுதிப்படுத்துவதே, பண்பட்ட முன்னேறிய சமூகத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். காசிக்கும், தமிழகத்திற்குமான தொடர்பை, ஆங்கிலேயர்கள் சிதைத்தனர். அதை மீட்டெக்கும் வகையில், காசியில் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் தோன்றிய சாதுக்கள் மற்றும் முனிவர்கள், பல நுாறு ஆண்டுகளாக, இந்தியாவில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கி உள்ளனர்.
நாட்டின் சிறந்த தோற்றத்திற்கு, கலாசார பெருமை வாய்ந்த தமிழகம், மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளது. பிரதமர் மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால், இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
அதைக் குலைப்பதற்கு மொழி, இனம், மதம், ஜாதி என்ற பெயரில் தொந்தரவுகள் வரக்கூடும். அதை நாம் கவனமுடன் எதிர்கொண்டு, வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும். இங்கு பட்டம் பெற்றவர்களின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சி. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் பங்கேற்றனர். பல்கலை துணை வேந்தர் சந்தோஷ்குமார் பல்கலை செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.