சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக 1,895 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக உயர்கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள அரசாணை:
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 7,198 உதவி பேராசிரியர் பணியிடங்களில், 5,303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்; 1,895 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே, நடப்பு கல்வி ஆண்டில், உதவி பேராசிரியர் காலியிடங்கள் முறையாக நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வி ஆண்டின் இறுதி நாள் வரை, 1,895 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
கல்லுாரி கல்வி மண்டல இணை இயக்குனர் தலைமையிலான குழுவால், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நியமனம் மேற்கொள்ளப்படும். மாதம், 20 ஆயிரம் ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்படும். இதற்காக, நடப்பு கல்வி ஆண்டில், 18.95 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.