புதுடில்லி: இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல, வர்த்தகம் மற்றும் சுற்றுலா விசாக்களை பெறுவதற்கான நேர்காணலுக்கு, 1,000 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கு செல்ல பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாக்களை வழங்குவதற்கு முன், விண்ணப்பிப்பவரிடம் நேர்காணல் நடத்தப்படும்.
இதற்காக காத்திருக்க வேண்டிய காலம் குறித்த தகவல், அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் நேற்றைய நிலவரப்படி, பி௧ எனப்படும் வர்த்தக விசா மற்றும் பி௨ எனப்படும் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிப்போர் நேர்காணலுக்கு, 1,௦௦௦ நாட்கள் காத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காத்திருப்பு காலம் கணிக்கப்பட்ட ஒன்றுதான். நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்றும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த, செப்டம்பரில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விசாவுக்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென்னிடம் அவர் தெரிவித்திருந்தார்.
கொரோனா பரவலால் சில கட்டுப்பாடுகள் இருந்ததால், காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளதாகவும், விரைவில் இது சீர்செய்யப்படும் என்றும் பிளிங்கென் அப்போது உறுதியளித்திருந்தார். அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டிருந்தது.