சென்னை: &'தினமலர்&' நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், &'அரிச்சுவடி ஆரம்பம்&' நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடந்தது.
விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதை துவங்கினாலும், வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் பெற்றோர் தங்கள் மழலைகளை பள்ளிகளில் சேர்ப்பதும் வழக்கம்.அந்த வரிசையில், &'தினமலர்&' நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்விக் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், &'அரிச்சுவடி ஆரம்பம்&' நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை, &'எவர்வின்&' கல்வி குழுமம் மற்றும் ஆவின் நிறுவனம் இணைந்து நடத்தின. சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் வசதியை கருத்தில் வைத்து, வடபழநி ஆண்டவர் கோவில், பெரம்பூர் எவர்வின் பள்ளி மற்றும் தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில், கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் பங்கேற்று, குழந்தைகளின் விரல் பிடித்து, அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்தனர்.கல்வி கோவிலுக்குள் உற்சாகத்துடன் நுழைந்த மழலையர் மற்றும் பெற்றோரை மழையும் வரவேற்றது.
வடபழநி ஆண்டவர் கோவிலில் நடந்த நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எம்.துரைசாமி, அவரது மனைவி கலைவாணி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் டாக்டர் காமகோடி, திரைப்பட பின்னணி பாடகி பத்மபூஷன் பி.சுசீலா.பரதநாட்டிய கலைஞர் ஷீலா உன்னிகிருஷ்ணன், வடபழநி ஆண்டவர் கோவில் தக்காரும் கோவை &'தினமலர்&' நாளிதழ் பதிப்பாளருமான எல்.ஆதிமூலம் ஆகியோர் பங்கேற்று,
இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை துவக்கி வைத்தனர். அதேபோல், கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., எம்.ரவி மற்றும் அவரது மனைவி தெய்வம், சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., கே.வி.கே.ஸ்ரீராம், டாக்டர் இந்திராணி சுரேஷ், ஆன்மிக சொற்பொழிவாளர் பி.சுவாமிநாதன், ஸ்ரீசங்கரா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் ஜெ. சீதாராமன் ஆகியோர் பங்கேற்று சிறப்பத்தனர்.
மேலும், பெரம்பூர் பெரம்பூர் எவர்வின் பள்ளியில், ஆன்மிக சொற்பொழிவாளர் தாமல் ஸ்ரீராமகிருஷ்ணன், விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், நாடக கலைஞர் டிவி வரதராஜன், தமிழ் கிராமிய நாட்டுப்புற பாடகர் அனிதா குப்புசாமி, மருத்துவர் நாகலட்சுமி ஸ்ரீதர் மற்றும் எவர்வின் கல்வி குழும தாளாளர் புருேஷாத்தமன் ஆகியோர், இளந்தளிர்களின் பிஞ்சு விரல்களை பிடித்து &'அ&' னா ஆவ&'ன்னா எழுதி அரிச்சுவடியை துவக்கி வைத்தனர்.
நிகழ்வில் பங்கேற்ற 1,000க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும், அழகிய பை, ஓவிய புத்தகம், கலர் பென்சில் என, எல்.கே.ஜி., படிப்புக்கு தேவையானவை அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், மழலைகளுக்கு புகைப்படத்துடன் கூடிய &'தினமலர்&' நாளிதழ் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நம் பாரம்பரிய முறையில், தட்டில் நெல் கொட்டி, அதில் குழந்தைகளின் பிஞ்சு விரலை பிடித்து, &'அ&'னா... &'ஆ&'வன்னா... எழுத வைப்பது, சரஸ்வதியின் அருள் குழந்தைகளுக்கு கிடைக்கும். பாரம்பரிய முறையை வழுவாமல், குழந்தைகளை படிக்க வைப்பதற்கு, &'தினமலர்&' இந்த முறையை கடந்த நான்காண்டுகளாக கடைப்பிடித்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. - டாக்டர் சுதா சேஷய்யன்,எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர்.
குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தை கற்று தரும் நிகழ்ச்சி, அரிச்சுவடி ஆரம்பம். இன்று, இறைவனுடைய அருள் கிடைக்கக்கூடிய நாள். இந்நிகழ்ச்சியின் மூலம், குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல திறமையோடு விளங்குவதற்கு, சரஸ்வதியின் அருள் கிடைக்கும். -சு.சுவாமிநாதன்,ஆன்மிக சொற்பொழிவாளர்.
குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதில் முதற்படியாக, &'தினமலர்&' இருக்கிறது. அதற்கு அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி உதாரணம். மாணவர்கள் வாழ்க்கையில் நன்றாக படித்து, உயர்ந்த நிலையை அடைவதற்கு காரணமாக இருக்கும் &'தினமலர்&' நாளிதழுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.- எம். ரவி, ஓய்வு பெற்ற டி.ஜி.பி.,
சிறந்த நிகழ்ச்சி; மன நிறைவாக உள்ளது. எழுத்தறிவித்தவன் இறைவனாவான். ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. &'தினமலர்&' நாளிதழின் இப்பணி மென்மெலும் தொடர வேண்டும்.- கே.வி.கே., ஸ்ரீராம்,சி.ஐ.எஸ்.எப்., டி.ஐ.ஜி.,
விஜயதசமி மிகவும் நன்னாள். இந்த நாளில் குழந்தைகளின் கல்வியை துவக்கி வைக்கும் விதமாக அவர்களுக்கு &'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு&' என்பதற்கு இணங்க, &'அ&' என்ற முதல் எழுத்தை எழுத கற்றுக் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி. இன்னும் 30 ஆண்டுகளில் இந்தியாவை உருவாக்கப் போகிறவர்களுக்கு, இன்று இது ஒரு துவக்கமாக அமைந்தது. -சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் டாக்டர் காமகோடி
தினமலர் நாளிதழுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. நான் பள்ளியின் உரிமையாளர் என்பதை விட, ஆசிரியர் என்பதில் தான் பெருமிதம் கொள்கிறேன். கல்வி என்பது நல்லது, கெட்டது எது என்பதை புரிந்து கொள்ளவும், நல்ல வேலை வாய்ப்பை பெறவும் அவசியமாகிறது. பெற்றோர்களே, குழந்தைகளுக்கு வீட்டில் உறவினர்களிடம் பேசவும், உலகத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்துங்கள். அழுத்தம் இல்லாத படிப்பு, சுணக்கம் இல்லாத உழைப்பு, நோய் இல்லாத உடம்பு இது தான் வருத்தமில்லாத வாழ்க்கையை கொடுக்கும். - புருஷோத்தமன், தாளாளர், எவர்வின் கல்விக்குழுமம்.
குழந்தைகளை அச்சமூட்டி வளர்த்தால், ஆட்டு மந்தையாக வளர்ப்போம்; அடங்கிப்போ என்று வளர்த்தால் அடிமையாக வளர்ப்போம். சிந்தி என்று வளர்த்தால், சிந்தனை செய்யக்கூடிய, சுயகாலத்தில் இருக்கக் கூடிய குழந்தைகளை வளர்ப்போம். எதை வளர்க்க போகிறோம் என்பது உங்கள் கையில் தான் உள்ளது. -விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்,சென்னை.
குழந்தைகளுக்கான, அட்சராப்பியாசம் எனும் ‛அ&' னா, ‛ஆவ&'ன்னா எனும், எழுத்தையும், கல்வியையும் சொல்லக்கூடிய வித்யாரம்பம் நிகழ்ச்சியை, &'தினமலர்&' சென்னையில் பல இடங்களில் நடத்துகிறது. இதில், பல குழந்தைகளுக்கு, ‛அட்சராப்பியாசத்தை&' துவக்கி வைக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கி உள்ளனர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.- தாமல் ஸ்ரீராமகிருஷ்ணன், ஆன்மிக சொற்பொழிவாளர்.
எனக்கு என் தாத்தா, 1956ல் இதே போன்று விஜயதசமி நாளில், மதுராந்தகத்தில் &'அ&' னா, &'ஆவ&'ன்னா எழுத கற்றுக்கொடுத்தது நினைவில் இனிக்கிறது. இன்று &'வித்யாரம்பம்&' துவங்கிய அத்தனை குழந்தைகளும், எதிர்காலத்தில் நல்ல கல்வியாளர்களாக பெரிய பொறுப்புகளில் வர, ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். -&'டிவி&' வரதராஜன், நாடக நடிகர்.
விஜயதசமி நாளில், தினமலர் நாளிதழும், எவர்வின் பள்ளியும் இணைந்து, &'வித்யாரம்பம்&' எனும் கல்வி நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதனால், நம் பாரம்பரியம், கலாசாரம் அழியாமல் இருக்கும். குழந்தைகளை கல்விப்பாதையில் அழைத்து செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. -அனிதா குப்புசாமி, தமிழ் கிராமிய நாட்டுப்புற பாடகர்.
இன்று நடந்த &'வித்யாரம்பம்&' நிகழ்ச்சி அத்தியாவசியமான நிகழ்ச்சி. வாழ்க்கையில், எந்த ஆரம்பமாக இருந்தாலும், அது நல்ல முறையில் துவங்குவது, அனைவருக்கும் இன்றிமையாதது. அதிலும், கல்வி ஆரம்பம் என்பது, விஜயதசமி எனும் நல்லநாளில், சான்றோர் முன்னிலையில், குழந்தைகளுக்கு கிடைப்பது சிறப்பானதாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். -டாக்டர் நாகலட்சுமி ஸ்ரீதர்,மெடிஸ்கேன் நிறுவனம், சென்னை.
&'வாட்ஸ் ஆப் - குரூப்&'பில், இந்த அரிச்சுவடி நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொண்டேன். அந்த வகையில், எனது முதல் குழந்தைக்கு, இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது, நல்ல ஆரம்பமாகும். இங்கு பேசியவர்கள், குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை விட, எப்படி வளர்க்கக் கூடாது என்பதை குறிப்பிட்டனர். அது பெற்றோருக்கான பாடமாக இருந்தது. -மாணவர்: சஸ்வந்த், பெற்றோர்: தினேஷ்குமார், பெரம்பூர்.
அரிச்சுவடி நிகழ்ச்சியில், எங்கள் குழந்தைக்கு கல்விக்கான நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதற்காக, தினமலருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கல்வி மட்டுமின்றி, குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதையும், இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டது அருமையாகவும், புது அனுபவமாக இருந்தது.- மாணவர்: தையான்பெற்றொர்: நஸ்ரின் கமால், புளியந்தோப்பு.
தினமலர் நாளிதழ் வாயிலாக, இங்கு நடந்த அரிச்சுவடி நிகழ்ச்சி குறித்து அறிந்து, முன் பதிவு செய்தோம். எங்கள் முதல் குழந்தைக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது குழந்தைக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தினமலரின் கல்விச்சேவையில், இது குறிப்பிடத்தக்கது. -மாணவர்: சாய்கிருஷ்ணாபெற்றோர்: சுகன்யா சுரேஷ், பெரம்பூர்.
பெற்றோர் கவனத்திற்கு...!
&'தினமலர்&' சார்பில், &'அரிச்சுவடி ஆரம்பம்&' நிகழ்வு மூன்று இடங்களில் வெற்றிகரமாக நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொரு குழந்தையும், பெற்றோரும், எழுதப் பழகிக் கொடுத்த குருவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இந்த புகைப்படங்கள் யாவும் இலவசமாகவே சான்றிதழில் ஒட்டி வழங்கப்பட்டன. நிகழ்வில் பங்கு பெற்றோரில், 90 சதவீதம் பேர் சான்றிதழை மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் பெற்றுக்கொண்டனர்.
10 சதவீதம் பேர், மழை காரணமாக சான்றிதழை பெற மறந்து சென்றுவிட்டனர். அவர்களின் புகைப்படமும் சான்றிதழும் வடபழநி ஆண்டவர் கோவிலில் உள்ளது.நீங்கள் உங்கள் புகைப்படத்தை அடையாளம் காண்பித்து பெற்று செல்லலாம்.
நெகிழ்ச்சி
முதன் முதலாக பள்ளி செல்லும் மழலைகளுக்கானதே இந்த அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி. இருந்தும், இன்ஜினியரிங் செல்லும் மாணவியான நான், கல்வி சான்றோர் மற்றும் பெரியவர்கள் ஆசி பெற்று கல்லுாரிக்குள் காலடி எடுத்து வைக்க விரும்புகிறேன்.
மறுக்காமல் என்னையும் ஆசீர்வாதம் செய்யவும் என்று மாணவி யாழினி பர்வதம் என்பவர், வடபழநி ஆண்டவர் கோவிலின் அரிச்சுவடி நிகழ்வு நடந்த இடத்திற்கு வந்து வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று குருஸ்தானத்தில் இருந்து ஷீலா உன்னிகிருஷ்ணன் மாணவி கொண்டு வந்த மடிக்கணினியை இயக்கி, ஆசீர்வதித்து அனுப்பினார்.