இன்ஜி., கவுன்சிலிங் 2ம் சுற்று துவக்கம் | Kalvimalar - News

இன்ஜி., கவுன்சிலிங் 2ம் சுற்று துவக்கம்செப்டம்பர் 26,2022,18:02 IST

எழுத்தின் அளவு :

சென்னை: இன்ஜினியரிங் முதல் சுற்று சேர்க்கை முடிந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்றுக்கு விருப்ப பதிவு நேற்று துவங்கியது. முதல் சுற்றில், அண்ணா பல்கலையில் அதிக சதவீதமும், அண்ணாமலை பல்கலையில் குறைந்த சதவீதமும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங், 10ம் தேதி துவங்கியது. இதில், முதல் சுற்றுக்கான இறுதி ஒதுக்கீடு நேற்று வெளியானது. இதன்படி, பொது பிரிவில் மட்டும், 9,218 இடங்கள் நிரம்பியுள்ளன. முதல் சுற்றின் இறுதியில், முன்னிலை இடங்களுக்காக, 4,278 பேர் காத்திருந்தனர். அவர்களில், 3,067 பேருக்கு முன்னிலை இடங்கள் மாற்றி ஒதுக்கப்பட்டன. மற்றவர்களுக்கு, ஏற்கனவே ஒதுக்கிய இடங்களே உறுதி செய்யப்பட்டன. நேற்று வரை, 5,887 பேர், கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்; 3,707 பேர் கவுன்சிலிங் உதவி மையங்களில் கட்டணம் செலுத்தியுள்ளனர்.



இந்நிலையில், ஒதுக்கீடு பெற்ற அனைவரும், நாளை மறுதினத்திற்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். கவுன்சிலிங் உதவி மையங்களில் சான்றிதழ்கள் அளித்து, கட்டணம் செலுத்தியவர்களும்; அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு, தங்களுக்கான கல்லுாரிகளை நேரில் அணுக வேண்டும் என, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.



இதற்கிடையில், இரண்டாம் சுற்றுக்கான விருப்ப கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகள் குறித்த &'ஆன்லைன்&' விருப்ப பதிவு, www.tneaonline.org என்ற இணையதளத்தில், நேற்று துவங்கியது. நாளை இரவு 7:00 மணி வரை பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில், 14 ஆயிரத்து 525 முதல், 45 ஆயிரத்து, 577 வரை உள்ள, 31 ஆயிரத்து 53 பேர், இரண்டாம் சுற்றில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



சேர்க்கை குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:




முதல் சுற்றில், 269 கல்லுாரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. மொத்தம் 446 கல்லுாரிகளில், 386 கல்லுாரிகளில் முதல் சுற்றில், 10க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., - இ.சி.இ., மற்றும் &'ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்&' போன்ற பாடப்பிரிவுகளுக்கு, மாணவர்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். சிவில், மெக்கானிக்கலுக்கு குறைந்த அளவே மவுசு உள்ளது. 20 தனியார் கல்லுாரிகள் மற்றும் 10 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், முதல் சுற்று சேர்க்கையில், அதிக அளவுக்கு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.




1,254 பேர் வெளியேற்றம்!


முதல் சுற்றில் பொதுப் பிரிவில் மட்டும், விருப்ப பதிவு அடிப்படையில் இடம் கிடைத்தும், 974 பேர் கல்லுாரிகளில் சேராமல் வெளியேறி விட்டனர். கேட்ட இடம் கிடைக்காமல், 280 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்காமல் வெளியேறி விட்டனர். இதன்படி, 1,254 பேர் முதல் சுற்றில் வெளியேறியுள்ளனர். முதல் சுற்றில் சரியாக இடங்களை தேர்வு செய்யாமல் தவறவிட்ட 249 பேர், இரண்டாம் சுற்றில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளனர்.




சேர்க்கை அதிகரித்த கல்லுாரிகள்!


முதல் சுற்றில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலையின் கிண்டி, குரோம்பேட்டை மற்றும் அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரிகளை தேர்வு செய்த, 90.32 சதவீதம் பேர் சேர்க்கையை உறுதி செய்துள்ளனர். அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில், 53 சதவீதம்; அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 77 சதவீதம் பேர் சேர்ந்துள்ளனர்.



அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 89; மத்திய அரசின் கல்லுாரிகளில், 73 சதவீதம் சேர்க்கை நடந்துள்ளது. தனியார் கல்லுாரிகளில், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் செயல்படும் கல்லுாரிகளை தேர்வு செய்தவர்களில், 78 சதவீதம்; இரண்டாம் கட்ட நகரங்களில் 83 மற்றும் மூன்றாம் கட்ட கல்லுாரிகளில், 65 சதவீதம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுடைமையான அண்ணாமலை பல்கலையில், 20 சதவீதம் பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us