பல்கலை மசோதாக்களுக்கு ஒப்புதல் மறுப்பது ஏன்? கவர்னர் ரவி விளக்கம் | Kalvimalar - News

பல்கலை மசோதாக்களுக்கு ஒப்புதல் மறுப்பது ஏன்? கவர்னர் ரவி விளக்கம்செப்டம்பர் 25,2022,19:31 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழக பல்கலைகளில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில், சட்ட சிக்கல் உள்ளதாக, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில், பல்கலைகளின் வேந்தராக தற்போது கவர்னர் ரவி உள்ளார். பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம், கவர்னரிடம் உள்ளது. துணைவேந்தர் நியமனத்தில், தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 



அதைத் தொடர்ந்து, துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா, ஏப்ரலில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சித்தா மருத்துவ பல்கலை சட்ட மசோதா தொடர்பாக, தமிழக அரசிடம் கவர்னர் சில விளக்கங்கள் கேட்டார்; அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.



ஆனால், இதுவரை பல்கலை தொடர்பான சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், கவர்னர் ரவி, நேற்று முன்தினம் மூத்த பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். 



அவர் கூறியுள்ளதாவது:



பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., சட்ட விதிகளின்படி, பல்கலைகளின் வேந்தராக, முதல்வரை நியமிக்க இடமில்லை. இது தொடர்பாக, அரசியல் சாசன ஆலோசனைகளை பெற வேண்டி உள்ளது.



கல்வி, பொதுப் பட்டியலில் உள்ளது. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் சிக்கல்கள் உள்ளன. நிதி தொடர்பான சட்ட மசோதாக்களுக்கு, உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது. 


சட்ட விளக்கம் தேவைப்படும் மசோதாக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன.சட்ட விதிகளின்படியே செயல்படுகிறேன். சனாதனம் தொடர்பாக, அரசமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டே, என் கருத்துகளை தெரிவித்து வருகிறேன். 



தமிழக அரசுடன் நல்லுறவு உள்ளது. முதல்வர் ஸ்டாலின், சிறந்த மனிதர்; தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய விரும்புகிறார். ஏதேனும் தெரிவிக்க விரும்பினால், கடிதம் எழுதுகிறார். தமிழகத்தை பொறுத்தவரை, கல்வி தரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.



பல்கலைகள், ஆரோக்கியமான நிலையில் இல்லை. எனவே, பல்கலைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, முன்னுரிமை அளிக்கிறேன். தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது. இது மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.



தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நன்கு பராமரிக்கப்படுகிறது. ஆனால், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாக உள்ளது. இது, சமூக நல்லிணக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us