நாடு முழுவதிலும் உள்ள ஐ.ஐ.டி., உட்பட தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுநிலை பட்டப்படிப்புகளில் 2023- 24ம் கல்வி ஆண்டில், தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குவதற்காக ஜாயின்ட் அட்மிஷன் டெஸ்ட் பார் மாஸ்டர்ஸ் எனும் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, குவகாத்தி இத்தேர்வை நடத்துகிறது. மொத்தம் ஏழு தேர்வு தாள்களில் கணினி வழியாக நடத்தப்படும் இத்தேர்வின் வாயிலாக, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.
படிப்புகள்:
எம்.எஸ்சி.,
எம்.ஏ.,
எம்.எஸ்சி.,-டெக்னாலஜி,
எம்.எஸ்சி.,-எம்.டெக். டியூல் டிகிரி,
எம்.எஸ்.,-ஆராய்ச்சி
ஜாயின்ட் எம்.எஸ்சி.,-பிஎச்.டி.,
மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட பிஎச்.டி., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தகுதியை இத்தேர்வு நிர்ணயிக்கிறது.
தகுதிகள்:
இத்தேர்வை எழுத, குறைந்தது ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற போதிலும், மாணவர்கள் தேர்வு செய்ய உள்ள முதுநிலை பட்டப்படிப்பிற்கு ஏற்ப துறை சார்ந்த பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருப்பதும் அவசியம். இத்தேர்வை இந்திய மாணவ, மாணவியர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் எழுதலாம். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
கல்வி நிறுவனங்கள்:
ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, என்.ஐ.டி., சி.எப்.டி.ஐ., ஐ.ஐ.இ.எஸ்.டி.,-சிப்புர், ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர்., ஐ.ஐ.பி.இ., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,-புனே, ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,-போபால் ஆகிய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுநிலை பட்டப்படிப்புகளில் ஜாம் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தேர்வு தாள்கள்:
பயோடெக்னாலஜி, ஜியாலஜி, கெமிஸ்ட்ரி, மேத்மெடிக்ஸ், எக்னாமிக்ஸ், பிசிக்ஸ் மற்றும் மேத்மெடிக்கல் ஸ்டேடிஸ்டிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு மையங்கள்:
நாட்டின் அனைத்து பிரதான நகரங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 11
தேர்வு நாள்: பிப்ரவரி 12, 2023
விபரங்களுக்கு: https://jam.iitg.ac.in/