சென்னை: பயிற்சி மருத்துவருக்கான கட்டணம் 5.20 லட்சம் ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலக ஊழியர்களுக்கு &'பூஸ்டர்&' தடுப்பூசி போடும் முகாமை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை, 31 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன; 32வது முகாம், அடுத்த மாதம் 7ம் தேதி நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.
வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள், தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவராக பணிபுரிய, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு 3.20 லட்சம் ரூபாயும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு இரண்டு லட்சம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
மாணவர்களால் அந்த கட்டணத்தை செலுத்த முடியவில்லை என, முதல்வரிடம் முறையிட்டனர். இதையடுத்து, அவர்களுக்கான கட்டணம், வெறும் 30 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பயிற்சி மருத்துவராக பணியாற்ற, 7.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே இருந்தது. இதனால், கிராமப்புற மாணவர்கள் நிறைய பேர், பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த ஒதுக்கீட்டை 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என, தமிழக அரசு, தேசிய மருத்துவ கவுன்சிலிடம் கோரியது; ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெளிநாட்டில் படித்த மருத்துவ 1,881 மாணவர்கள், தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 11 மருத்துவமனைகளில் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு, வேறு வெளிநாடுகளில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக, மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.