புதுச்சேரி: தேசிய வாழ்வாதார சேவை மையம் சார்பில் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் பராமரிப்பு பயிற்சி புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.
புதுச்சேரி துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தேசிய வாழ்வாதார சேவை மையம் சார்பில் கணினி மென்பொருள் மற்றும் கணினி வன்பொருள் பராமரிப்பு பயிற்சி, சுல்தான்பேட்டை ராக் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரியில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி இலவசமாக ஓராண்டுக்கு அளிக்கப்பட உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பகுதி நேர பயிற்சியாக நடைபெறவுள்ளது. கல்லுாரி பயிலும் மற்றும் கல்லுாரி படிப்பை முடித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக் கலாம்.பயிற்சி காலத்தில் ஆயிரம் ரூபாய் எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த பயிற்சியில், தேர்ச்சி பெறுவோருக்கு சென்னை, தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.பயிற்சியில் சேர ஆண்டு வருவாய் ரூ.3 லட்சம் மற்றும் வயது வரம்பு 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஜூலை 30ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்படுகிறது.
விண்ணப்பங்களை, ரெட்டியார்பாளையம், கனரா வங்கி வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.