மீடியா, விளம்பரம், டிசைன் என இன்றைய நவீன பொருளாதாரச் சூழலில் போட்டோகிராபி அறிந்தவருக்கான வாய்ப்புகள் எண்ணற்று இருக்கின்றன. ஆனால் இதில் உங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்பினால் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் திருமணங்களில் போட்டோ எடுத்துப் பிழைக்கலாம் என்பது போன்ற பழமையான சிந்தனைகளை நீங்கள் கைவிட வேண்டும்.
இன்று ஐ.டி., எனப்படும் இன்பர்மேஷன் டெக்னாலஜியின் பயன்பாடானது இல்லாத துறையே இல்லை எனக் கூறலாம். போட்டோகிராபியிலும் இதன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கிறது. இதனால் முன்பு போல தவறாக ஒரு போட்டோ எடுத்து விட்டாலுமே கூட கவலையின்றி அதைத் திருத்தும் சாப்ட்வேர்களும் அப்ளிகேஷன்களும் அதிகரித்துள்ளன. இன்று போட்டோகிராபர்களிடம் கேமரா இருக்கிறதோ இல்லையோ, கட்டாயமாக கம்ப்யூட்டர் சிஸ்டம் ஒன்று இருக்க வேண்டியுள்ளது.
குறிப்பிட்ட போட்டோ சாப்ட்வேர்களில் ஒன்றை நீங்கள் சரளமாகக் கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே கூறியுள்ளவற்றை அடிப்படை நிலையிலான போட்டோகிராபி துறைத் தேவை எனக் கூறலாம். பெரிய அளவில் செல்ல விரும்பினால் உங்களுக்கான வாய்ப்புகள் இவை தான்...
* படம் வரைதல் மற்றும் பெயின்டிங் போன்றவற்றுடன் போட்டோகிராபி ஆர்வமும் பெற்றவராக நீங்கள் இருந்தால், கிராபிக் டிசைன், அக்சசரிஸ் டிசைன் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் போன்ற துறைகள் உங்களுக்குப் பொருந்தும்.
* பத்திரிகைத் துறையில் ஆர்வமுடையவராக இருந்தால், பத்திரிகைகள், ‘டிவி’ போன்றவற்றுக்கான போட்டோகிராபர் பணி வாய்ப்புகளை நீங்கள் பெறலாம்.
* பேஷன், போர்ட்ரய்ட் போன்ற துறைகளிலும் போட்டோகிராபர்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பல ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு போட்டோ சொல்லும் என்பதால் இதில் உங்களது திறன் தான் உங்களுக்கான வாய்ப்புகளைக் கொண்டு வரும். திறன் பெற நவீன தொழில் நுட்பத்தை நன்றாக நீங்கள் அறிவது அவசியம்.