வேளச்சேரி: சென்னை வேளச்சேரியில் நடந்த, பருவநிலை மாற்றம் குறித்த &'பசுமை பயிற்சி&'யில், பள்ளி மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
புவி வெப்பமயமாவதால், பருவ நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். குப்பையை தரம் பிரிக்காமல் எரிப்பதால், மீத்தேன் வாயு வெளியேறி, புவியின் தட்ப வெட்பத்தில் மாற்றம் ஏற்படுவதாகவும் அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே, குப்பையை தரம் பிரித்து கையாள்வதன் அவசியம் குறித்து, அரசு மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
நம்ம ஊரு பவுண்டேசன், புவி எர்த் கேர் சொல்யூஷன்ஸ் மற்றும் வேளச்சேரி டான்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் இணைந்து, பசுமை பயிற்சி முகாம் நடத்தின.இதில், வேளச்சேரி பகுதியில் இருந்து, பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தற்சார்பு வாழ்க்கை முறைக்கான அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குப்பை தரம் பிரிப்பதன் அவசியம், மாசு ஏற்படுவதை தடுப்பது குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், பருவ நிலை மாற்றம் ஏற்பட காரணம், புவி வெப்பமடைவதை தடுக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து, அறிவியல்பூர்வமாக விளக்கப்பட்டது. அதோடு, பருவ நிலை மாற்றம் குறித்த தகவல்கள் அடங்கிய அட்டை வழங்கப்பட்டது. அதில், மாணவ - மாணவியர் குறிப்பிட்ட வண்ணம் பூசி முறைப்படுத்தினர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.