கோவை: கோவை மாவட்ட மைய நுாலகத்தில், போட்டித்தேர்வுக்கு படிப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
தேர்வுக்கு தயாராக புதிய நுால்கள் இல்லை என, தேர்வர்கள் வருத்தத்தில் உள்ளனர். கோவை மாவட்ட மைய நுாலகத்தில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் அரசு பணி போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு என, தனிப்பிரிவு உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
இப்போது, டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 மற்றும் குருப் 4 தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், இங்கு வந்து படிப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. காலை, 9:00 முதல் இரவு, 7:00 மணி வரை, படித்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 21ம் தேதி, டி.என்.பி,எஸ்.சி., குருப் 2 தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வை பல லட்சம் பேர் எழுத உள்ளனர். நுாலகத்தில் போட்டித்தேர்வுக்கு தேவையான நுால்கள் இருந்த போதிலும், அவை பற்றாக்குறையாக உள்ளன.
போட்டித்தேர்வாளர்கள் சிலர் கூறுகையில், &'நுாலகத்தில் உள்ள போட்டி தேர்வுக்கான தனிப்பிரிவில், 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட, பழைய நுால்கள் மட்டுமே உள்ளன. பல ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடக்காததால், அந்த தேர்வுக்கான புத்தகங்கள் குறைவாக உள்ளன. அதனால் நாங்கள் சொந்தமாக புத்தகங்கள் வாங்கி வந்து, இங்கே அமர்ந்து படித்து வருகிறோம். &'அப்டேட்&' செய்யப்பட்ட புதிய நுால்களை நுாலகத்தில் வைக்க வேண்டும்&' என்றனர்.
கோவை மாவட்ட மைய நுாலக நுாலகர் ராஜேந்தின் கூறுகையில், &'&'இப்போது குருப் 2 மற்றும் குருப் 4 தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தினமும், 200 முதல் 250 பேருக்கு மேல் போட்டி தேர்வர்கள் படிக்க வருகின்றனர். அவர்களின் சொந்த நுால்களை படிக்க அனுமதி கொடுத்து இருக்கிறோம். புதிய நுால்கள் விரைவில் வந்து விடும்,&'&' என்றார். தேர்வுகள் முடிவதற்குள் வந்தால் சரி!