புதுடில்லி: &'முதுநிலை மருத்துவ படிப்புக்கான, &'நீட்&' நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்க முடியாது&' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஐந்து மாதங்கள் தாமதமாக நடந்தது. இதற்கான கலந்தாய்வு இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு, 21ல் நடக்கிறது. இதை எதிர்த்து, தேர்வு எழுதும் டாக்டர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், &'கடந்த ஆண்டுக் கான கலந்தாய்வு இன்னும் முடியாத நிலையில், நடப்புஆண்டுக்கான நுழைவுத் தேர்வை நடத்தினால், தகுதி பெறாத மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, தேர்வு தேதியை ஒத்தி வைக்க வேண்டும்&' எனக் கோரினர். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பது, மருத்துவ துறையில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
இதனால், டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன், நோயாளிகள் அவதிக்கு உள்ளாவர்.அதுமட்டுமின்றி, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வுக்கு தயாராக உள்ளனர். தேர்வை ஒத்தி வைப்பது அவர்களையும் பாதிக்கும்.
கொரோனாவால் தாமதமான தேர்வுகளை, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அரசு முயற்சிக்கிறது. அதில் பாதிப்பு ஏற்படக் கூடாது. எனவே, குறிப்பிட்ட தேதியில், முதுநிலை நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதை ஒத்தி வைக்க முடியாது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.