தஞ்சாவூர்: &'&'அறிவியல் உலகை, இந்தியா முன்னெடுத்துச் செல்ல வாய்ப்புகள் அதிகமாக உள்ளன,&'&' என, &'சந்திரயான்&' திட்ட முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்ற துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று நடந்த தனியார் கல்லுாரி விழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா பரவலுக்கு பிறகு, உலக அளவில், உயிரி தொழில் நுட்பம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டுமானால், அறிவியல் தொழில்நுட்பத்தில் பின் தங்கி விடக்கூடாது.
உலகில் நிகழ்ந்த முதல் இரண்டு தொழில் புரட்சிகளில், நாம் பயனாளியாகத் தான் இருந்தோம்; பங்கெடுக்க முடியவில்லை. இப்போதைய உயர் தொழில்நுட்பங்களான விண்வெளி, உயிரி தொழில்நுட்பம், கணினி, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் நாம் பங்கெடுக்க வேண்டும்.
இதற்காக, பெரிய ஆய்வுகள் மேற்கொள்வதற்கான முயற்சிகளை, ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்கின்றனர். அதற்கேற்ப, அடுத்த தலைமுறைகள் உருவாகக்கூடிய நிலையை கல்லுாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
கொரோனாவுக்கு பின், அறிவியல் உலகம் நல்ல வெளிச்சத்துக்கு வர வேண்டிய அவசியம், அவசரம் உள்ளது. இதை, இந்தியா முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உயர் கல்வியில் அதிகமான மாணவர்களைக் கொண்ட நாடாக இந்தியாவும், அதிக அளவிலான மாணவர்களை கொண்ட மாநிலமாக தமிழகமும் இருக்கும் போது, நம் கடமையும் மிக அதிகமாக உள்ளது. கடமையும், வாய்ப்புகளும் மிகச் சிறப்பாக இருப்பதால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.