புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு, திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியலை சென்டாக் நேற்று வெளியிட்டது.
புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட, &'நீட்&' மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு, சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. நீட் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், கடந்த 21ம் தேதி வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இப்பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் 24ம் தேதி மாலைக்குள் சென்டாக் இணையதளம் வழியாக தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டது. சில மாணவர்களின் பெயர்கள் புதுச்சேரி மாநில இடஒதுக்கீட்டில் இடம்பெறவில்லை என புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியலை சென்டாக் நேற்று வெளியிட்டது.
இதில், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 1660 பேர், நிர்வாக ஒதுக்கீடு-6154, கிறிஸ்துவ மைனாரிட்டி- 16, தெலுங்கு மைனாரிட்டி- 21, என்.ஆர்.ஐ. -302 பேர் இடம் பெற்றுள்ளனர்.திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியலில் ஆட்சேபனை இருந்தால், சென்டாக் இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் இன்று 27ம் தேதி மாலை 6:00 மணிக்குள் தெரிவிக்கலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.