ஹிந்தி பிரசார சபா நடத்தும், ஒன்பது நிலை தேர்வுகளிலும் வெற்றி பெற்று, ஏழாம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம், ஹிந்தி இலக்கியத்தில் இளங்கலை பட்டம் முடித்ததற்கான அந்தஸ்தை பெற்றுள்ளார். சென்னை, தி.நகரில், ஹிந்தி பிரசார சபா இயங்கி வருகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்நிறுவனத்தின் சார்பில், ஹிந்தி மொழி பேசப்படாத மாநிலங்களில், ஹிந்தி பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும், ஒன்பது நிலை தேர்வுகளில் வெற்றி பெறுவோர், ஹிந்தி இலக்கியத்தில், இளங்கலை பட்டம் பெற்றதற்கான தகுதியை பெறுவர். இந்த தேர்வுகளை எழுத வயது வரம்பு கிடையாது.
அந்த வகையில், சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த துரை ராஜன்-மோகனசுந்தரி தம்பதியின் மகள் துர்கா, 11 என்ற ஏழாம் வகுப்பு மாணவி, பரிச்சயா முதல் பிரவீன் வரை அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.