சென்னை: அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கும், பிப்., 1 முதல் ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி:
கொரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் கருதி, கல்லுாரி மாணவர்களுக்கு இம்மாதம் 31ம் தேதி வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அறிவிக்கப் பட்டது.
இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, மாணவர்கள் மற்றும் பேராசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்தினோம். இன்றைய சூழலில், நேரடியாக தேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால், ஆன்லைன் வழியில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, இந்த மாதம் நடப்பதாக அறிவித்து தள்ளிவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், பிப்., 1 முதல் ஆன்லைன் வழியில் நடத்தப்படும்.
அனைத்து பாடங்களுக்கும், பிப்., 20க்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்.மாணவர்களுக்கு ஏற்கனவே 90 நாட்கள் நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதால், அவர்கள் தேர்வு எழுதுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
முறைகேடு
ஆன்லைன் தேர்வில் முறைகேடு நடக்காத வகையில், அதற்கான வழிமுறைகளை உயர் கல்வித்துறை வகுத்து அறிவிக்கும்.இந்த ஆன்லைன தேர்வு, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகளின் மாணவர்களுக்கும் பொருந்தும். அனைத்து பல்கலைகளுக்கும், வினாத்தாள் வடிவமைப்பு ஒரே மாதிரியாக இருக்கும். ஏற்கனவே உள்ள வினாத்தாள் முறைகளில் மாற்றம் இருக்காது.
மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுதி முடித்ததும், விடைத்தாளை &'இ- - மெயில்&' அல்லது கல்லுாரி அறிவிக்கும் இணையதள இணைப்பு வழியாக அனுப்ப வேண்டும். பின், விடைத்தாளை கல்லுாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.செமஸ்டரில் உள்ள அனைத்து பாடங்களுக்குமான தேர்வுகளும் முடிந்த பின், அனைத்து பாட விடைத்தாள்களையும் சேர்த்து, மொத்தமாக கல்லுாரிகளுக்கு அனுப்பலாம்.
இந்த ஆன்லைன் தேர்வுக்கு பின், சூழலுக்கு ஏற்ப ஆன்லைன் வழியிலோ, நேரிலோ வகுப்புகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். இறுதி செமஸ்டர் இதைத்தொடர்ந்து, ஜூனில் திட்டமிடப்பட்டுள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாக நடத்தப்படும். அப்போது கொரோனா சூழல் ஏற்பட்டால், இறுதி செமஸ்டர் தேர்வு சுழற்சி முறையிலாவது நேரடியாக நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பல்கலை தரம்: 29ம் தேதி ஆலோசனை
அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
சென்னை பல்கலையின் கல்வித்தரம் மிகச் சிறப்பாக இருந்தது. தற்போது, பல்கலையின் கல்வித் தரம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துப்படி, 29ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், சென்னை பல்கலை இணைப்பு கல்லுாரிகளின் முதல்வர்கள், உயர்கல்வி மன்றம் மற்றும் பல்கலையை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பர்.
அனைத்து பல்கலைகளின் பாடத் திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும். கடந்த கால தமிழக வரலாறுகள் பாடப் புத்தகங்களில் இல்லை. வரலாற்று புத்தகங்களை முதலில் எழுதியவர் கே.கே.பிள்ளை. அவரது புத்தகங்கள் கூட தற்போது கிடைக்கவில்லை. இதை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். பல்கலைகளின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக, சட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.