சென்னை: &'பள்ளிகளின் ஆவணங்கள் மற்றும் வருவாயை ஆய்வு செய்த பிறகே, அரசின் நிதியுதவியை வழங்க வேண்டும்&' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசின் நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு, குறித்த காலத்தில் கற்பித்தல் மற்றும் பராமரிப்பு மானியத்தை வழங்க வேண்டும். அதற்கான ஆய்வு பணிகளை, மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளுக்கான நான்கு வகை சான்றிதழ்களை பெற வேண்டும். அரசு அனுமதி மற்றும் ஒப்புதல் அளித்த இடங்களில் தான் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனரா, கைத்தொழில் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் நியமனம், மாணவர்களுக்கு உபயோகமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றிருந்தால், ஐந்து ஆண்டு பணி முன் அனுபவம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிக்காக வழங்கப்பட்ட சொத்துக்களின் வருவாயையும், பராமரிப்பு மானியம் வழங்கும் முன் கணக்கிட வேண்டும். இவற்றை ஆய்வு செய்து சரியாக இருந்தால் மட்டும், பள்ளிகளுக்கான நிதியுதவியை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.