என்.சி.சி.,யின் சான்றிதழ்களுக்கு ராணுவப் பணிகளில் முக்கியத்துவம் தரப்படுகிறதா? இது பற்றி விளக்கவும். | Kalvimalar - News

என்.சி.சி.,யின் சான்றிதழ்களுக்கு ராணுவப் பணிகளில் முக்கியத்துவம் தரப்படுகிறதா? இது பற்றி விளக்கவும்.டிசம்பர் 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :


என்.சி.சி., என்பது இன்று பல பள்ளிகளாலும், கல்லூரிகளாலும் மறக்கப்பட்ட ஒன்று என்றே கூறலாம். கல்விச் சுமை அதிமானதால் மாணவர்களின் அடிப்படைத் திறன் வளர்க்கும் சிறப்புப் பயிற்சிகள் இன்று பெரும்பாலும் பள்ளிகளில் அரிதாகிவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒரு பணிக்கான நேர்முகத் தேர்வில் என்.சி.சி.,யில் இருந்த மாணவர்களுக்கும் பிறருக்கும் இருக்கும் வித்தியாசத்தை பார்த்த மாத்திரத்திலேயே அறிய முடிந்தது. இன்று நிறைய மதிப்பெண் பெற்றால் போதும், பிற அம்சங்கள் பற்றி கவலை வேண்டாம் என ஆசிரியர்களே மாணவர்களுக்குக் கூற வேண்டிய கட்டாயச் சூழலே நிலவுகிறது. தேசிய சிந்தனைகளை மாணவர் மத்தியில் ஊட்டுவதில் என்.சி.சி.,க்குப் பெரிய பங்கு இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

என்.சி.சி.,யில் 3 விதமான சான்றிதழ்கள் தரப்படுகின்றன. ஏ, பி, சி என்பவை இவை. ஒரு மாணவர் பள்ளியில் என்.சி.சி.,யில் ஒன்று முதல் 2 ஆண்டுகள் இருந்தால் அவர் ஏ சான்றிதழ் பெற முடியும். ஜூனியர் டிவிசன் என இது அழைக்கப்படுகிறது. கல்லூரி அளவில் பி சான்றிதழ் தரப்படுகிறது. இதற்கு என்.சி.சி.,யில் 75 சதவீத அட்டென்டண்ஸ் அவசியம். கூடுதலாக ஒரு பயிற்சியும் உண்டு. இவை இரண்டையும் விட சி சான்றிதழ் தான் பலருக்கும் வேலை வாய்ப்பைத் தரும் சான்றிதழாகும்.

இதற்கான தேர்வை எழுத பி சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். மேலும் கல்லூரியில் 3ம் ஆண்டு படிப்பவராகவும் இருக்க வேண்டும். அவுட்டோர் கேம்ப் ஒன்றில் கலந்து கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் தேசிய ஒருமைப்பாடு முகாம் ஒன்றில் அல்லது டில்லி குடியரசு தின விழா பரேடில் கலந்து கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரலில் இதற்கான தேர்வு என்.சி.சி., இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது.

ராணுவப் பணிகளில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருப்போருக்கான வாய்ப்புகள் கூட இருக்கின்றன. இந்தியன் மிலிடரி அகாடமியின் படிப்புகளில் 32 சதவீத இடங்கள் என்.சி.சி., ‘சி’ சான்றிதழ் பெற்றிருப்போருக்காக ஒதுக்கப்படுகின்றன. இவர்கள் எஸ்.எஸ்.பி., தேர்வுகளில் தகுதி பெற்றிருப்பது அவசியம்.

நான்-டெக்னிகல் பிரிவில் என்.சி.சி., சிறப்பு நுழைவு முறையில் 5 ஆண்டு குறுகிய கால பணி வாய்ப்பானது இந்திய தரைப்படையால் தரப்படுகிறது. கப்பற்படையின் எக்சிகியூடிவ் பிரிவில் நிரந்தர பணி வாய்ப்புகளை என்.சி.சி., சி சான்றிதழ் தகுதியுடையவர் பெற முடியும். இந்திய விமானப் படையின் பிளையிங் பிரிவில் என்.சி.சி., ‘சி’ சான்றிதழ் பெற்றவர் நிரந்தர அதிகாரி நிலைப் பணிகளைப் பெறலாம்.

கல்லூரி என்.சி.சி.,யிலிருந்து வெளிவந்த 2 ஆண்டுகளுக்குள் இது போன்ற வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பது மிக மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ராணுவப் பணிகள் தவிர பாராமிலிடரி பிரிவுகளில் என்.சி.சி., சி சான்றிதழ் பெற்றவருக்கு 2 முதல் 10 மதிப்பெண்கள் தரப்படுகின்றன. இதனால் வேலை பெறுவது சுலபமாகிறது. இப்படி மாணவர்களுக்கு வளமான எதிர்காலத்தை என்.சி.சி. உறுதி செய்வதை நமது இளைஞர்கள் அறிவது மிக மிகத் தேவையான ஒன்று என்றே கூறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us