கல்விக் கடன் மறுத்த வங்கிக்கு நீதிமன்றம் கண்டனம் | Kalvimalar - News

கல்விக் கடன் மறுத்த வங்கிக்கு நீதிமன்றம் கண்டனம்

எழுத்தின் அளவு :

பெற்றோர் வாங்கிய கடன் நிலுவைக்காக, கல்விக் கடன்கேட்டு விண்ணப்பித்த மகளுக்கு கடன் வழங்க மறுத்த வங்கியின் செயலை உயர்நீதிமன்றம் கண்டித்தள்ளது.

அந்த மாணவிக்கு உடனடியாக கல்விக் கடன் வழங்கும்படியும் உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவியான ஆர். சஹானா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2008ம் ஆண்டு முகப்பேரில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் கல்விக் கடன் பெற்றேன்.  2009லும் கல்விக் கடன் கிடைத்தது. ஆனால், 2010ம் ஆண்டில், அதே வங்கியில் எனது பெற்றோர் வியாபாரத்திற்காக பெற்ற கடன் பாக்கி நிலுவையில் உள்ளதைக் காரணம் கூறி எனக்கு கல்விக் கடன் வழங்க வங்கி மறுத்துவிட்டது.

இந்த நிலையில், மூன்றாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு கட்டினர். ஆனால் இறுதியாண்டு கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

எனவே, முதலாம் ஆண்டில் எனக்கு வழங்குவதாக அறிவித்த கல்விக் கடனை தொடர்ந்து வழங்க வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மாணவிக்கு வழங்க வேண்டிய கல்விக் கடனின் மீதித் தொகையை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டார். எந்த நோக்கத்திற்காக கல்விக் கடன் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதோ, அதற்கு முரணாக வங்கி நிர்வாகம் செயல்பட்டுள்ளது. இறதியாண்டு படிக்கும் மாணவிக்கு கடன் மறுத்தது சரியானது அல்ல. பெற்றோரின் கடன் நிலுவைக்காக மகளுக்கு கல்விக் கடன் வழங்க மறுக்கக் கூடாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us