சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, இரண்டாவது முறையாக தேதி மாற்றப்பட்டு, பிப்., 5ல் நடத்தப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்கள், அடுத்த கட்ட படிப்புக்கு கல்வி உதவித்தொகை பெறும் வகையில், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாநில மற்றும் தேசிய அளவில் இரண்டு கட்டங்களாக, இந்தத் தேர்வு நடக்கிறது. நடப்பு கல்வியாண்டில், தேசிய திறனாய்வு தேர்வு, வரும் 23ம் தேதி நடப்பதாக இருந்தது.
ஆனால், ஞாயிறு ஊரடங்கு அமலானதால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாது என்பதால், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தேர்வு தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 29ம் தேதி நடக்க இருந்த தேர்வு, கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால், பிப்., 5க்கு மாற்றப்பட்டுள்ளதாக, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை, 25ம் தேதி முதல், பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஹால் டிக்கெட்டுகளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.