சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டில் மோடி வரலாற்று சாதனை! | Kalvimalar - News

சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டில் மோடி வரலாற்று சாதனை!ஜனவரி 20,2022,12:45 IST

எழுத்தின் அளவு :

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான, ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீதம்; பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் உத்தரவை, உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு உள்ளது.


இந்த தீர்ப்பானது, பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மருத்துவ கல்வியில் சேர விருப்பமுள்ள, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும். கடந்த 2014ல் பிரதமர் மோடி அரசு பதவியேற்ற பின், மருத்துவ கல்வித் துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்களில், இந்த இட ஒதுக்கீடு முடிவுகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.


சமூக நீதி நடவடிக்கை


மிக முக்கியமாக, சமூக நலன் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மத்திய அரசின் எண்ணங்களும், செயல்களும் உள்ளதை, இதன் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இந்த ஒதுக்கீடானது, நாட்டு மக்களுக்கு சமூக நீதியை வழங்கும் வகையிலான நடவடிக்கையாகும்.


மத்திய அரசின் அறிவிப்புப்படி, அகில இந்திய அளவிலான இடஒதுக்கீடு முடிவால், பிற்படுத்தப் பட்ட ஓ.பி.சி., பிரிவினரில், 1,500 மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினரில், 550 மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்பில் பயன்பெறுவர். முதுநிலை மருத்துவ சேர்க்கையில், ஓ.பி.சி., பிரிவின், 2,500 மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவில், 1,000 மாணவர்கள் பயன் அடைவர்.


மண்டல் கமிஷன் மத்திய அரசின் இந்த முடிவின் பின்னணியில், 40 ஆண்டு வரலாறு உள்ளது. 1979ல் மொரார்ஜி தேசாய் அரசு அமைத்த மண்டல் கமிஷன் சார்பில், ஓ.பி.சி.,க்கான இட ஒதுக்கீடு விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணிகளின் வேலைவாய்ப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை ஆகியவற்றில், 27 சதவீத இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்று 1980ல் மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது.


ஆனால், 1990ல் தான் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு, இந்த பரிந்துரையை அமல்படுத்தப் போவதாக அறிவித்தது. அதுவும் முதல் கட்டமாக வேலைவாய்ப்பில் மட்டும், 27 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறியது. அகில இந்திய ஒதுக்கீடு முறை உருவான இன்னொரு வரலாற்றை பார்த்தால், 1986ல் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது.


அதாவது, இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த இடத்திலும் மாணவர்கள் தங்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையில் மட்டுமே சேர்ந்து, உயர்கல்வியை படிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது. சட்ட திருத்தம் இதன்படி, மருத்துவ கல்லுாரிகளில் இளநிலை படிப்பில் 15 சதவீதமும்; முதுநிலை படிப்பில் 50 சதவீதமும், அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற முறை அறிமுகமானது.


இதையடுத்து, மருத்துவ படிப்பில், பட்டியலினத்தவருக்கு 15 சதவீதமும்; பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க, 2007ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்பின், 2007ம் ஆண்டில், மத்திய கல்வி நிறுவனங்களுக்கான அகில இந்திய மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றியது.


அதில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்தது. அப்போதும் கூட, மருத்துவ கல்விக்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதன்பின்னே, இட ஒதுக்கீட்டின் முக்கிய மைல் கல்லாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு, மாணவர் சேர்க்கையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் முடிவை, பிரதமர் மோடியின் அரசு எடுத்தது. இதற்காக, 2019ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தமும் கொண்டு வந்தது. 


திருப்புமுனை


இந்த நடவடிக்கையானது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில், எந்த இட ஒதுக்கீட்டையும் அனுபவிக்காத, இந்தியாவில் வசிக்கும் ஒரு தரப்பினருக்கு, பெரும் பலனை அளிப்பதாக உள்ளது. இது சமூக நீதியின்படி அந்த மக்களை காப்பதற்கு, பிரதமர் மோடி மேற்கொண்ட மிகச்சிறந்த முடிவாகும்.


இதன் தொடர்ச்சியாக, மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளில், பொதுப்பிரிவு இடங்களை குறைக்காமலே, இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு என இரண்டும் பின்பற்றப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மருத்துவ கல்வி வரலாற்றில் இந்த முடிவு உண்மையான திருப்புமுனையாகும்.


தற்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும், ஓ.பி.சி., பிரிவில் மத்திய பட்டியலில் உள்ளவர்களும், அகில இந்திய ஒதுக்கீட்டில், எந்த மாநிலத்தில் இருந்தும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், 179 புதிய மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்பட்டு, நாட்டில் உள்ள மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் நம்பிக்கை


இளநிலை மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கையானது 65 சதவீதம், அதாவது 55 ஆயிரத்தில் இருந்து 85 ஆயிரமாக உயர்ந்துள்ளது. முதுநிலை படிப்பு இடங்களின் எண்ணிக்கை, 55 சதவீதம், அதாவது 30 ஆயிரத்தில் இருந்து 55 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.


மருத்துவ கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், மருத்துவம் சார் உற்பத்தி துறைகளில், இந்திய தயாரிப்புகளை அதிகப்படுத்தி, மற்ற நாடுகளுக்கு மத்தியில் பெருமை மிக்கதாக இந்தியா திகழ்வதாகவும், இந்திய மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


- பாலகுருசாமி, முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலை.,

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us