வேடசந்தூர்: பள்ளியில் இடிக்கப்பட்ட கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் கட்டாததால் மாணவர்கள் இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 460 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 1- 8 தமிழ் வழியிலும், மற்றொரு பிரிவில் 1 முதல் 5 வரை ஆங்கில வழியிலும் என வகுப்புகள் நடக்கின்றன. இரு ஆண்டுகளுக்கு முன், தமிழ் வழியில் 1 - 5 ம் வகுப்பு வரை செயல்படும் வகுப்பறை கட்டடம் சேதம் அடைந்ததாகக் கூறி இடித்துத் தள்ளினர்.
அதன்பின் புதிய கட்டடம் கட்டும் நடவடிக்கை எதுவும் இல்லாததால் மாணவர்கள் இட நெருக்கடியில் தவிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்கள் நலம் கருதி இடித்த கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.