சென்னை: பொங்கல் பண்டிகைக்கு பின், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உட்பட, ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பெற்றோர் கோரிக்கை
மேலும், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், 10ம் வகுப்பு முதலான வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து விட்டு, ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என, உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆலோசனை
இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் பொங்கல் விடுமுறை விடப்படுகிறது. அதன்பின், 19ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை மட்டும் நடத்தலாமா என்பது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதுகுறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.