சென்னை: தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரே சமயத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டன.
இக்கல்லூரிகளை, டில்லியில் இருந்தபடியே காணொலி காட்சி வழியாக துவக்கி வைத்த, பிரதமர் நரேந்திர மோடி, &'&'தை பிறந்தால் வழி பிறக்கும்,&'&' என கூறி, தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத, விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம் என, 11 மாவட்டங்களில், புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள், 4,080 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை பெரும்பாக்கத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு, 24.65 கோடி ரூபாய் மதிப்பில், மத்திய அரசு சார்பில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா, நேற்று மாலை நடந்தது.
முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரதமர் நரேந்திரமோடி, டில்லியில் இருந்து &'வீடியோ கான்பரன்ஸ்&' வழியாக, 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
விழாவில் பிரதமர் பேசியதாவது:
கடந்த 2014ல் நாடு முழுதும், 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இருந்தன. ஏழு ஆண்டுகளில், மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை, 596 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 2014ல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான இடம், 82 ஆயிரமாக இருந்தது; தற்போது, 1.48 லட்சமாக உயர்ந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைகள் எண்ணிக்கை, ஏழில் இருந்து, 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்தார்
முதல் முறையாக ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை, ஒரே மாநிலத்தில் துவக்கி வைத்துள்ளேன். சில தினங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தேன். அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளேன்.
சுகாதாரத் துறை எவ்வளவு முக்கியமானது என்பதை, கொரோனா பெருந்தொற்று நமக்கு உணர்த்தி உள்ளது. இத்துறையில் முதலீடு செய்வோருக்கு, சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டத்தின் கீழ், ஏழை மக்கள் பெருமளவில் பயன் பெறுகின்றனர்.
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் கட்டமைப்பு இயக்கம், சுகாதார கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் இடைவெளியை அகற்றி, மாவட்ட அளவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வகை செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்துக்கு, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் உதவி வழங்கப்பட உள்ளது.
இது நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள், மாவட்ட பொது சுகாதார பரிசோதனைக் கூடங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் துவங்க உதவும்.வரும் ஆண்டுகளில், தரமான குறைந்த செலவிலான சிகிச்சைக்கு உரிய இடமாக, இந்தியாவை மாற்றுவதே என் கனவு.
மருத்துவ சுற்றுலாவுக்கு தேவையான அனைத்து வசதிகளும், இந்தியாவில் உள்ளன. இது நம் மருத்துவர்களின் திறன் அடிப்படையில் ஏற்பட்டது. தொலை மருத்துவ சேவைகளிலும், மருத்துவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.தமிழ்மொழி மற்றும் கலாசாரம் என்னை ஈர்க்கிறது. ஐ.நா., சபையில் உலகின் மிகத் தொன்மை வாய்ந்த மொழியான தமிழில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, என் வாழ்நாளில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.
புதிய தேசிய கல்விக் கொள்கையில், இந்திய மொழிகள் மற்றும் இந்திய அறிவாற்றல் முறை ஊக்குவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் வழியே தமிழ் மொழியை தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வி அளவிலான பள்ளிக் கல்வியிலேயே, செம்மொழியாக கற்க முடியும். தமிழ் மொழியின் பெருமளவு மின்னணு வடிவங்கள், பாரத்வாணி திட்டத்தின் கீழ் &'டிஜிட்டல்&' மயமாக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கூட அளவில் தாய்மொழி மற்றும் உள்ளூர் மொழியில் கல்வி கற்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.பொறியியல் போன்ற இந்திய தொழில்நுட்ப படிப்புகளையும், இந்திய மொழிகளில் மாணவர்களுக்கு வழங்க, அரசு நடவடிக்கைகளை துவக்கி உள்ளது. &'ஒரே பாரதம் உன்னத பாரதம்&' என்பது வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை விரிவுப்படுத்தவும், நம் மக்களை நெருக்கமாக்கவும் விரும்புகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
&'தை பிறந்தால் வழி பிறக்கும்!&'
பிரதமர் பேச்தை துவங்கும் முன், தமிழில் &'வணக்கம். தை பிறந்தால் வழி பிறக்கும்&' எனக் கூறி, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். அதேபோல், பேச்சை முடிக்கும்போது, &'நன்றி, வணக்கம்&' எனத் தமிழில் கூறினார்.
கூடுதலாக 1,450 எம்.பி.பி.எஸ்., இடங்கள்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள, 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,450 எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான இடங்கள், கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில், 11 ஆயிரத்து 200 மருத்துவ வல்லுனர்கள் மற்றும் பணியாளர் பணியிடங்கள், புதிதாக உருவாக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, இம்மாவட்டங்கள் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் வசிக்கும், 1.50 கோடி மக்களுக்கு, தரமான உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும்.
&'நீட்&' தேர்வில் தமிழகத்திற்கு விலக்குபிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும், மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்பது கருணாநிதியின் கனவு. இதை 2006 சட்டசபை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவரது கனவு, இன்று நிறைவேறி இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிக எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு இடங்களுடன், மருத்துவத் துறையில் நம் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக, தமிழகம் விளங்குகிறது.
இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் மனமார்ந்த நன்றி. அதேபோல், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும், புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க, மாநில அரசுக்கு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டும். மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி, மக்களுக்கு பயன் தரும் மருத்துவ திட்டங்களை செயல்படுத்துவதிலும், தி.மு.க., அரசு நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது.
&'வருமுன் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம்,நம்மை காக்கும் 48&' என புதுமையான திட்டங்களை தீட்டி செயல்படுத்தும், தமிழக அரசின் மருத்துவத் துறைக்கு, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும். பல மாநிலங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், கிராமப்புறங்களிலும், அரசுத் துறையிலும் சிறப்பாக சேவை செய்வதற்கு, தமிழக அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையே அடிப்படை.
எங்கள் கொள்கை, இந்த வாய்ப்புகளை தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதே. தமிழகத்தின் மருத்துவத் துறையின் வெற்றியும், இந்தக் கொள்கையின் விளைவே.
இந்த அடிப்படைக் கொள்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான், &'நீட்&' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தி வருகிறோம். எனவே, மனிதவள ஆற்றலின் அடித்தளமாக அமைந்துள்ள, மாணவர் சேர்க்கை முறை தொடர்பான, தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு, 25.65 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் அமைத்து தந்த மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி. இவ்வாறு முதல்வர் பேசினார்.