சென்னை: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில், 2,774 முதுநிலை ஆசிரியர்கள், மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படுவர் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணை:
அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளில், தற்போது 3,005 முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,954 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மீதமுள்ள 1,051 பணியிடங்கள் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாயிலாக நிரப்பப்படும்.ஆனால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை தற்போது நிரப்பாமல் இருந்தால், மாணவர்களின் கல்வி தரம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் கல்வி நலன் கருதி, உடனே நிரப்ப வேண்டியுள்ளது.
எனவே, தற்போதுள்ள காலியிடங்களில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல், வரலாறு, புவியியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மட்டும், 2,774 முதுநிலை ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று, பள்ளிக்கல்வி கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார்.
எனவே, முதுநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ளவர்களை, பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியே நியமித்து கொள்ள அனுமதி அளித்து, 13.87 கோடி ரூபாய் அனுமதி வழங்கப்படுகிறது.நியமனம் செய்யப்படும் நாளிலிருந்து ஐந்து மாதங்களுக்கு அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பதவி உயர்வு வழியே நியமனம் செய்யப்படும் வரை, காலியிடங்களை நிரப்பி கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும். இந்த ஊதியம் பள்ளி தலைமை ஆசிரியர் வழியே வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.