சென்னை: &'இல்லம் தேடி கல்வி&' திட்டத்துக்கு, மாணவர்களையும், தன்னார்வலர்களையும் சேர்ப்பதற்கான கலைக் குழுக்களின் பிரசாரம் துவங்கியது. சென்னை கலெக்டர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
கொரோனா காலத்தில், அரசு பள்ளி மாணவர்கள் இழந்த கல்வி திறனை மீண்டும் பெறும் வகையில், அவர்களுக்கு, &'இல்லம் தேடி கல்வி&' என்ற டியூஷன் எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
இந்த கல்வி ஆண்டில், 200 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாவட்ட வாரியாக தன்னார்வலர்களை நியமித்து, அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கி, மாணவர்களுக்கு மாலை நேரத்தில் டியூஷன் எடுக்கும் வகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
சென்னையில், குடிசை பகுதிகள், அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் படிக்கும் பகுதிகளில், இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சமூக நலக்கூடங்கள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களை ஆர்வமாக வர வைக்கவும், தன்னார்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கலை பயண பிரசாரம் துவக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை கலெக்டர் விஜயராணி, கலை குழுக்களின் பிரசாரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த குழுக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று, சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், நடனம், நாடகம் ஆகியவற்றின் மூலம், மாணவ - மாணவியருக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
முதல் கட்டமாக டிசம்பர் 5 வரை இந்த பிரசாரம் நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் காமராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுரேந்திரபாபு, கற்பகம், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.