சமூக விலகல் ஏன் அவசியம்? | Kalvimalar - News

சமூக விலகல் ஏன் அவசியம்?

எழுத்தின் அளவு :

கொரோனா கொள்ளை நோய் பரவலைத் தடுக்க, 'சமூக விலகலை' (Social Distancing) கடைப்பிடியுங்கள் என்று நோயியல் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் ஒன்றாகக் கூடுவதையும், ஒருவரையொருவர் தொட்டுக்கொள்வதையும் தவிர்ப்பதே சமூக விலகல் எனப்படுகிறது. இச்சமயத்தில் சமூக விலகல் ஏன் மிகவும் அவசியம் என்பதற்கு கணிதம் அளிக்கும் விளக்கத்தைப் பார்ப்போம்.
கொள்ளை நோய்கள் பரவத் தொடங்கும் காலகட்டத்தில், நோயைப் பற்றிய விழிப்புணர்வும், தடுக்கும் மருந்துகளும் அதிகம் இருக்காது. அதனால், இக்காலகட்டத்தில் அதிக மக்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

நோய் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுவதை கீழ்க்கண்ட படம் மூலம் விளக்கலாம்.
நோய் பரவுவதை நாம் பல கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் கட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், சராசரியாக இரண்டு பேருக்கு நோயைப் பரப்புகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
பாதிக்கப்பட்ட இந்த இரண்டு நபர்கள், இரண்டாம் கட்டத்தில் (தலா இரண்டு நபர்கள் வீதம்) நான்கு நபர்களுக்கு நோயைப் பரப்பி இருப்பார்கள். இரண்டாம் கட்டத்தின் முடிவில் மொத்தம் 7 பேர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
இந்த நோய் அடுக்கேற்ற முறையில் பரவும். அதாவது ஒருவர் கண்டிப்பாக இரண்டு பேருக்கு நோயைப் பரப்புகிறார் என்றால், அடுத்தடுத்த கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, முந்தைய கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்காக அதிகரித்திருக்கும்.
ஆனால், உண்மையில் ஒருவர் கண்டிப்பாக இருவருக்கு நோயைப் பரப்புவார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இரண்டுக்கும் மேற்பட்டவர்களுக்கும் பரப்பலாம், அல்லது ஒருவருக்கு மட்டும் பரப்பலாம், அல்லது யாருக்குமே பரப்பாமல்கூட இருக்கலாம். இந்தப் பரவல் பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது.
ஆனால், மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இந்த அடுக்கேற்ற முறையில் கணித்த எண்ணிக்கைக்குத் தோராயமாக இருக்கும்.
'கோவிட் 19' வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் இரட்டிப்பாகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுக்கேற்ற முறையில் கணித்த எண்ணிக்கை, தற்போது தகவல்களின் மூலம் கிடைத்த எண்ணிக்கையை ஒத்திருக்கிறது.
சமூக விலகலை மேற்கொள்ளாவிட்டால்...
மிக அதிகமான மக்கள் தொகையில், தொடக்க காலகட்ட கணிப்புகளுக்கு அடுக்கேற்ற முறையைப் பயன்படுத்தலாம். அதாவது முதன்முதலில் வூஹானில் பரவத் தொடங்கியபொழுதோ, அல்லது ஈரான், இத்தாலிக்கு முதலில் பரவிய பொழுதோ எத்தனை பேர் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதைக் கணிக்க இம்முறையை உபயோகப்படுத்தலாம். ஆனால், இப்பொழுது கணிசமான நபர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். இதற்கு மேல் எவ்வளவு நபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கணிக்க, இம்முறையைப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்ட பிறகு, நோய் பாதிப்புக்கு உள்ளாகாதவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். அதனால் பாதிக்கப்பட்ட ஒரு நபரால், முன்பு பரப்பியதைப்போல இப்பொழுது அதிகமான பேருக்குப் பரப்ப முடியாது. நோய் பரவுதல் குறைந்திருக்கும்.
ஆனால், மக்கள் ஒன்றுகூடினாலோ, பயணம் மேற்கொண்டாலோ நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
இப்பொழுது பரவும் விதத்தை 'சமூக வலை' எனும் முறையை (Social Network Model) கொண்டு கணிக்கலாம்.
படத்தில் தெரியும் சிவப்பு கணுக்கள் பாதிக்கப்பட்டவர்கள். நீல கணுக்கள், எப்பொழுது வேண்டுமானாலும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள். படத்தில் இருக்கும் பெரிய கணு, அதிக நபருக்குப் பரப்பக்கூடிய ஆற்றல் பெற்ற நபர் (Super Spreader). அதாவது அதிக நபர்களிடம் தொடர்பு கொண்டிருப்பவர். இவருக்குப் பரவி விட்டால், நோய் மீண்டும் அடுக்கேற்ற முறையில் வேகமாகப் பரவத் தொடங்கும். இப்படிப்பட்ட நபர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க சமூக விலகலை மேற்கொள்வது அவசியமாகிறது.
சமூக விலகலின் பயன்!
சமூக விலகல் மூலம் பரவும் வேகத்தைக் குறைக்கலாம். வேகத்தைக் குறைப்பதன் மூலம், ஒரு மனிதரால் பாதிப்புக்குள்ளாகும் சராசரி மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க இயலும். இப்படிச் செய்வதால் பாதிப்புக்குள்ளாகும் மொத்த மக்களின் எண்ணிக்கை அவ்வளவாகக் குறையாது. ஆனால், பரவுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகரிக்கும்.
இந்த நேரத்தில், நாம் சுதாரித்துக்கொண்டு மருத்துவ வசதிகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் அனைவருக்கும் மருத்துவ வசதிகள் செய்து தர இயலாது. பரவும் வேகம் குறைந்தால் மருத்துவ வசதிகளை அதிகரித்துக்கொள்ள நமக்கு நேரம் கிடைக்கும்.
முறையான மருந்துகள் இப்பொழுது இல்லை. இது பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல், சமூக விலகல், மற்றும் சுகாதாரத் தேவையை அதிகரித்து இருக்கிறது.
நன்றி: 'The Conversation'


பாதிக்கப்பட்டவர்கள்
எப்பொழுது வேண்டுமானாலும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள்

அதிக நபருக்குப் பரப்பக்கூடிய ஆற்றல் பெற்ற நபர்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us